துரோகி
என்னிதய சாளரங்களைத் திறந்து
உன்னை அங்கிருந்த சிம்மாசனத்தில்
அமர்த்திய என்விழிகளை
நாடு கடத்துகிறேன்.
இந்த விரல்கள் தானே
உனக்கு கவிதைஎழுதி கவுரவித்தது.
இந்த கால்கள் தானே
உனைநோக்கி ஓயாது நடக்கவைத்தது...
அவைகளை வெட்டி எறிகிறேன்.
பட்டுக் கம்பளத்தில்
பூவென்றுதானே
பறித்து வைத்தேன்
பூநாகமாக
எப்போது மாறியது ....
இப்போதல்லவா தெரிகிறது
பூவின் இதழில் இருந்தது
பனியின் ஈரமில்லை
இன்னும் காயாத
கொலையின் ரத்தத் துளிகள்
இனி கவிஞர்களே
இன்று முதல் சொல்லாதீர்கள்
இந்த மான்களைப் போல்
இவள் அழகென்று:
இவளைப் போல்
இந்த நாய்கள்
அசிங்கமென்று சொல்லுங்கள் .
பல்கலைகழக பட்டம் வாங்காமலே
பாபிலோன் தொங்கு தோட்டம்
கட்டி முடித்தது
ஆங்கோர் தூக்கணாங் குருவி.
நீயும்தான்-
கில்லெட்டின் இல்லாமலே
தலை கொய்கிறாய்
புல்லெட் இல்லாமலே
கொலை செய்கிறாய்
வண்டிச் சக்கரங்கள்
பதிந்துபோன களத்து மேட்டில்
விமானம் வந்திறங்க காத்திருந்தேனோ
சிறுமூங்கில் வெட்டியெடுத்து
சின்னதாய் ஒரு
குழல் செய்து
சாத்தானிடம் கொடுத்து விட்டேனோ
சிலந்தியின்
வலைப் பின்னல்களுக்குள்ளும்
காளான்களின்
புற்று வீடுகளுக்குள்ளும்
இல்லை இல்லை..
உன் இறுக்கமான இதயத்திற்குள்ளும்
சூத்திரங்கள்
இருக்கத்தான் செய்கின்றன.
இன்னும்
நான் படிக்க
எவ்வளவோ இருக்கிறது
உன்னையும்
உன்போன்றோரையும் சேர்த்துதான் .