ஏன் சொல் தேவதையே
கவிதையின் வீதிகளில்
உன்னிதயத்தை
நீ விலக்கிக் காட்டி
காதலின் முகவரியை
ஏன்
என் மீது எறிந்தாய் ?
வார்த்தைகள்
பித்துப் படித்தலைகிற
பெரும் யவனக் காடுகளில்
மணம் மாறா
வனப் பூவொன்றை
தேடிக் கொண்டிருந்த
எனது தியானங்களில்
உருவேற்றிய
மந்திர உச்சாடனங்களாய்
நீயேன்
உருமாறினாய் ?
எனது
நான்மாடக் கூடலின்
அந்தகாரத்தில்
ஒரு
தெய்வத்தின் நடமாட்டத்தைப்
போன்ற
உனது உலாக்களில்
என்னை பந்தயப் புறாவாய்
பறக்க விட்டு
முன்நெற்றிக் காற்றிலாடும்
உனதொரு ஒற்றை ரோமத்தில்
என்னை ஏன்
தூக்கிலிட்டாய் ?
மறுபரிசீலனை
செய்ய வியலா
உன தத்தனை
பிரார்த்தனைகளின்
சகிப்பின் இம்சையை
அகிம்சையில்
தோய்த்து
காதலின் இரசாயனத்தை
என் புலன்கலனைத்திலும்
ஏன் புகச் செய்தாய் ?
எனதிதயத்தின்
அத்தனை
வழிமொழிதல்களையும்
உனது ஒப்பம் பெற்றே
நிறைவேற்றுமளவிற்கு
தாட்சண்யமற்ற
உனது உடன்படிக்கைகளில்
கைரேகை புரட்டக்கூட
என்னையனுமதிக்காத
உனதிதய
கித்தான் கூடாரத்திற்கு
என்னை ஏன்
காவலாளியாக
நியமித்திருக்கிறாய் ?
எனதத்தனை
" ஏன் " - களையும்
உனது ஒற்றை மைதானத்தில்
வீழ்த்திச் சாய்த்துக்
கூக்கிரலிட்டு
முடிசூட்டிக் கொள்
போ !
உன் ஜென்ம அடிமையென்
கால்களில் அல்ல -
என்னிதயத்தின் வேர்களில்
நேசத்தின் சங்கிலிகளை
பிணைத்திருக்கிறாயே
நான் என்ன செய்ய ?