அருகே மிக அருகே - முரளி
அருகே..... மிக அருகே......
காலில் அடிபட்டு ஒய்வாக இருந்தார் ராமசாமி. என்ன ஏதென்று பதற வேண்டாம். குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் கணுக்காலில் மயிரிழை உடைப்பு. கால் கட்டு போட்டு அசையக் கூடாது என்பது மருத்துவர் கட்டளை.
சும்மா இருத்தல் என்றால் என்ன என்பதை இதுவரை அனுபவித் திராததால் அவருக்கு பொழுதே போகவில்லை. எவ்வளவு நேரம் தான் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது. அவருக்குப் பிடித்த ஆங்கிலப் பட சானலில் பார்த்த படத்தை திரும்ப திரும்ப பார்த்து கிட்டத் தட்ட மனப் பாடமே ஆகிவிட்டது. கிரிக்கெட் கொஞ்சம் பார்ப்பார். ஆனால் இந்தியா நன்றாக ஆடவேண்டும். இல்லை என்றால் இவர் ரத்த அழத்தம் கூடி விடும்...
செய்திகள் பார்ப்பது இப்பொழுது மிகவாக குறைத்துக் கொண்டுள்ளார். எல்லா சானல்களும் அவர்கள் விரும்பும் செய்திகளை அவர்கள் விரும்பும் வண்ணம் திரித்துக் கூறுவதால் "உண்மை எது பொய் எது ஒண்ணும் புரியல" என்று எதையும் பார்பதை தீவிரமாக கொள்ளவில்லை... காலை செய்தித் தாளை பத்து நிமிடம் மேலோட்டமாக மேய்ந்து விட்டு தூக்கிப் போட்டார் என்றால், அதைப் பொறுக்கி வைத்த மனைவி இது ஒரு தண்டச் செலவு என்று பொருமாத நாட்கள் கம்மி....
இவருக்கு எப்படிப் பொழுது போகுதுன்னு ஆச்சர்யப் பட்டீங்கன்னா அதற்கு ஒரு ரகசியம் இருக்கு. காதக் குடுங்க யார் கிட்டயும் சொல்லாதீங்க.... கொஞ்ச நாளா இவர் கவிதை எழுதராராம். இவருக்கு ஒரு கூட்டாளியும் உண்டு. இரண்டு பேரும் தினம் காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் டெலிபோனில் விவாதிப்பர். அவரவர் எழுதிய கவிதைகளை தாங்களே புகழ்ந்து கொண்டோ அல்லது மற்றவரை புகழ வைத்தோ கேட்டு மகிழ்வர். இந்த இரைச்சல் கச்சேரியின் போது வீட்டிலிருப்பவர்களின் காதில் பஞ்சு..
இந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் ராமசாமி ரொம்ப பரபரப்பா இருக்கார். என்ன சார்னு கேட்போம் (இப்போது அவருக்குள்ள புதிய போழுது போக்கால எல்லோரும் அவரிடமிருந்து சற்று தள்ளியே இருக்கிறார்கள் - எங்கே உட்கார வெச்சு கவிதை வாசிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று - பிள்ளைகள், மனைவி உட்பட)
இருந்தாலும் அடுத்தவர் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால் நமக்கு காரணம் தெரிந்தே ஆகவேண்டுமே. ரிஸ்க், ஆனாலும் துணிந்தே கேட்போம்.
"ஒண்ணும் இல்ல சார் என் ப்ரண்டு வரார் என்னைப் பார்க்க அதான்.."
"யாரு சார் கவிதை எல்லாம் கூட எழுதுவாரே...."
"அவரேதான்.... கால்ல அடிபட்டு இருக்கே... பார்க்க வரார்..."
ஒரு இடத்துல ஒரு கவிஞர் இருந்தாலே கஷ்ட்டம்.... ரெண்டா....? மெதுவா நழுவுவது தான் நல்லது...
சொன்னபடி சரியாக நாலு மணிக்கு நண்பர் வந்தார். வாசல் மணியடிக்க மனைவி சென்று கதவைத் திறந்து வரவேற்றாள்.... முதல் முதல் சந்திப்பதால் "மிஸஸ் ராமசாமி..,? என்ற வினாவுடன் அறிமுக மானார்கள்.
யாரது நண்பனுடன்.... ஒர் இளைஞன்...இராமசாமி புருவம் உயர்த்த...
"என்ன பார்க்கர, என் பையன்டா.... கார்த்திக்... தனியா போகாதப்பா நான் கூட்டிண்டு போரேன்... சீக்கிரம் வந்தா கூட இருந்து கூட்டிட்டு வரேன்... இல்லன்னா விட்டுட்டு போரேன்னான்... நல்லதாப் போச்சு இந்த போக்குவரத்து நெரிசல்ல கஷ்டப்படாம ஹாயா அவன் கூட வந்துட்டேன்..,"
பையன் நெளிந்து கொண்டே "ஹல்லோ அங்கிள்... எப்படி இருக்கீங்க." என்றான் கைப் பேசியிலிருந்து கண் எடுக்காமல்.,
எல்லோரும் அமர்ந்தார்கள். கார்த்திக் தீவிரமாக கைப் பேசியை தடவ ஆரம்பித்தான்.
நண்பர் ராமசாமியைப் பார்த்து "அப்புறம்... "
" ..........ம்..ம்...."
"ஏன்டா.....? பாத்து நடக்க மாட்டியா ......? இப்படி விழுந்து காலை உடைச்சுண்டு இருக்க...."
உடனே இராமசாமி மனைவி "நல்லா சொல்லுங்க ...... இவருக்கு இன்னும் சின்னப் பிள்ளைன்னு நினைப்பு.., எப்பவும் ஒரே ஓட்டம்தான்..... இப்ப யாரு கிடந்து அவஸ்த்தை படறது..."
இராமசாமி பேச்சை மாற்ற "சரி சரி ... பொண்ணு என்ன பன்றா பாரு... நண்பர் வந்திருக்கார்னு சொல்லு...."
உள்ளே சென்று வந்தவள் " ஃபோன்ல எதோ பண்ணின்டு இருக்கா, வரேன்னா.," கார்த்திக்கும் ஃபோனில் மூழ்கி இருந்தான்.
இராமசாமி மனைவி அடுக்களை சென்று ஒரு தட்டில் பஜ்ஜியும். இன்னொரு தட்டில் பிஸ்கட்டும், கோப்பையில் தண்ணீரும் கொண்டு வைத்து "காப்பியா, தேனீரா...?" என்றாள்.
"காப்பி" என்ற விடை பெற்றுக் கொண்டு மறைந்து போனாள்.
நண்பர்கள் பஜ்ஜியுடன் தங்கள் பழய கதையையும் அசை போட ஆரம்பித்தனர். கார்த்திக் கைப் பேசியில் கண்ணும் கருத்துமாக இருந்தான்,..
இடையில் இராமசாமி சைகையால் மனைவியிடம் பெண் என்ன செய்கிறாள் என கேட்க அவளும் சைகையால் "ஃபோன்" என்றாள்.
நண்பர்கள் பேச்சு தொடர்ந்தது,.,,,
இடை இடையே சில கவிதைகள் சிலாகிக்கப் பட்டது,
கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலை உயர்த்த பல திட்டங்கள் தீட்டப் பட்டது
இதற்கு இடையில் காப்பி வந்தது.,.. கார்த்திக் ஒரு கையால் காப்பி எடுத்து மறு கையால் கைப் பேசியை தட்டினான்...
உள்ளே மகளுக்கு காப்பி கொடுத்த மனைவி வந்து "இன்னும் ஃபோன்" என்று சைகை காட்டிச் சென்றாள்.
காப்பி குடித்த சிறிது நேரத்தில் நண்பர் கிளம்பத் தயார் ஆனார்....
இராமசாமி "கூப்பிடு அவளை,.. அவங்கள்ளாம் கிளம்பராங்க..,."
நண்பர் "இருக்கட்டும்பா ... அடுத்தமுறை பார்த்துக் கலாம்"
இராமசாமி "நீ இரு.., நீ வந்ததே இல்லை ., இதான் முதல்முறை வர... இனி எப்ப வருவியோ...."
உள்ளே சென்ற மனைவி மகளுடன் வர ...
கையில் கைப்பேசியுடன் வந்தவள் துள்ளி
"ஏய் கார்த்திக்...!! என்றாள்...
"ஹாய் .... நீ எங்க இப்படி..,?"
"என்ன விளயாடறயா....? எங்க வீட்டு ஹால்ல உட்காந்துன்டு...... யாரோ அப்பா நண்பர் வீட்டில் இருக்கேன்னு குறுஞ் செய்தி அனுப்பின...."
"இரு இரு... இதான் எங்க அப்பா.... " என்றான் கார்த்திக்
"ஹல்லோ அங்கிள்.... நலமா...."
இரு நண்பர்களும் திரு திரு வென்று முழிக்க கோரசா
"நீங்க இரண்டு பேரும் இவ்ளோ நேரம் ஃபோன்ல சாட் பண்ணின்டா இருந்தீங்க....?????????
இருவரும் சிரித்தார்கள்.. எல்லோரும்தான்....