இளைய சமுதாயம் சிகரமாய் விளங்கட்டும்

ஏறிட்டுப் பார்க்கும் ஏக்கமிகு பார்வை
ஏனிந்த நிலையென தரும் சோர்வை !
வந்தது வான்வழி என்றென நோக்குதா
செல்வதும் வானிற்கு என்று பார்குதா !

கண்டம் மாறிப் பிறந்ததற்கு வருத்தமா
விழிகளில் வழிவதும் சோக விருத்தமா !
எண்ணத்தில் ஓடுது எதிர்வரும் காலமா
கனவு சாலையில் கவலைப் பயணமா !

தொலை நோக்கு திட்டமா உன்மனதினில்
வியத்தகு வினாவிடையா உன்நெஞ்சினில் !
முற்போக்கு சிந்தனையா உன் உள்ளத்தினில்
முன்னேற வழிதேடலா உன் இதயத்தில் !

புருவம் உயர்த்தி விழிகள் விரிகின்றதே
பருவம் கடந்த வழிகள் தோன்றுகிறதா !
ஆழ்ந்த பார்வையும் அழகாய் சொல்கிறதே
அகன்ற பாதையும் உனக்கு தெரிகிறதா !

ஏற்றமே உந்தன் வாழ்வில் நிலைக்கட்டும்
மாற்றமே நடப்பின் தளரா மனமிருக்கட்டும் !
வருங்கால தலைமுறை வலிமை பெறட்டும்
இளைய சமுதாயம் சிகரமாய் விளங்கட்டும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Dec-14, 10:02 pm)
பார்வை : 703

மேலே