எனது கவிதைப் புத்தகத்தை திருப்பிப் பார்க்கிறேன் 27

மலர் சொன்ன கவிதை (பகுதி 1) 1

"கொல்" என்று பூத்திருந்தது
காலை மலர்
அருகில் நின்றேன்
கவிதை சொல்லேன்
என்றது காலை மலர்

இதழ்களை சொல்வதா
இதழின் மென்மையை சொல்வதா
மது ததும்பும்
மகரந்த மஞ்சத்தை சொல்வதா
மலர் மஞ்சத்தில் அமர்ந்து
ரீங்கார வண்டுகள்
தேனருந்த இடந்தந்த
உன் பரந்த நெஞ்சத்தை சொல்வதா

பசுமைத்தளிர்களும்
மொட்டுகளும்
மரகதப் பச்சை இலைகளும்
புடைசூழ அழகு ராணியாக
கொடியில் அசைந்திடும்
அழகை சொல்வதா
தென்றல் காதலன் வந்து
உன்னைத் தீண்ட
நீ நாணி நிற்கும்
கோல எழிலை சொல்வதா
எதை சொல்வதடி
மலர் தோழி என்றேன்

எல்லாமே சொல்லிவிட்டாய்
கவிஞனே; நன்றி
அர்ச்சகர் குடலையுடன் வரும் வேளை
ஆலயத்திற்கு கொண்டு சென்று
மந்திர மறையுடன் இறைவன் அடியில்
என்னை அர்ச்சிக்கும் காலை வேளை
ஆலயத்திற்கு வாயேன்
இருவரும் இணைந்து பாடலாம்
என்றாள் மலர் தோழி

எனக்கு நம்பிக்கை இல்லை
என்றேன்
ஆலய வாசலுக்காகவது வா
நான் கவிதை சொல்கிறேன்
என்றாள்
சரி என்றேன் ( தொடரும் )

-------------------------------------------------------------------------------------------------------------------
மலர் சொன்ன கவிதை (பகுதி 2 ) 2

ஆலய வாசலில் நின்றேன்
உள்ளிருந்து மலர் சொன்னது
கவிஞனே ஆலயவாசலில் நீ
ஆண்டவன் காலடியில் நான்

ஆகாயத்திலிருந்து வரும் நீர்
நதியாகி கடலை சென்று அடையும்
இது இயற்கையின் நியதி
எனக்கும் அதுதான் நியதி
உனக்கும் அதுதான் நியதி

நேற்று கொடியில்
கண் மூடி கூம்பி
தவம் இருந்தேன்
இன்று இறைவன்
பதம் அடைந்தேன்

வெளியே நிற்பதெல்லாம்
வீண் பிரதாபம்
உள்ளே நுழை
உள்ளே நுழைவதற்கு
இங்கே கடவுச் சொல்
கடவுள் நாமம்தான்
உள்ளே நுழை ; உள்ளே பார்
அதுதான் விவேகம்

கேட்டதற்கு நன்றி
கவித் தோழனே
இப்போது தியான நேரம்
மலர் மௌனமானது

நெஞ்சில் ஏதோ ஒரு
நம்பிக்கை துளிர்த்தது
கோபுரத்தை நிமிர்ந்து
பார்த்தேன்
கால்கள் ஆலயத்தின்
உள்ளே என்னை அறியாமல்
நுழைந்தது அம்மா என்று
அழைத்தது உள்ளம்

மலர் சொன்ன விவேகம்
இது தானோ (முற்றும்)
--------------------------------------------------------------------------------------------------------------------

என் இந்த மௌனம் 3

ஏன் இந்த மௌனம்
இன்னும் ஏன் தயக்கம்
விழி ஓரத்தில்
காதல் தீபத்தை ஏற்றி வைத்து
இமைத் திரையில் மூடுவது ஏனோ
--------------------------------------------------------------------------------------------------------------------

உன் புன்னகை தத்துவம் 4

உன் காலடி நடந்தால் சித்திரம்
உன் கண் இமை திறந்தால் புத்தகம்
உன் புன்னகையோ ஒரு தத்துவம்
உன் அழகே நான் போற்றும் ஆலயம்
--------------------------------------------------------------------------------------------------------------------

என் பதம் உன் பதம் 5

உன் பொற்பதம் போற்றும்
என் சொற்பதம்
என் பதம் என்றும் உன் பதம்
அப்பதம் தந்தது என் கவிதை
கலைவாணியே அக்கவிதை
நான் உனக்கு சூடும் பாமாலை
--------------------------------------------------------------------------------------------------------------------

சுருள் குழலிலா நீல விழியிலா 6

மர நிழலில் அவள் மடியில்
படுத்து நாவல் படித்திருந்தேன்
மலர்கள் தூவி வாழ்த்தியது

நாவலை பிடுங்கி
விட்டெறிந்தாள்
குனிந்தாள்
பார்த்தேன்
என்ன பார்க்கிறாய்
என்றாள்

எனது நாவலின் ஆரம்ப வரியை
என்றேன்
எங்கே தொடங்கலாம்
நெற்றியிலா
நெற்றியில் புரளும்
சுருள் குழலிலா
நீல விழியிலா
செவ்விதழிலா
என்று கேட்டேன்

இதயத்தில் தொடங்கு
என்றாள்
மலர்கள் மீண்டும் தூவின
இலைகளும் கைகோர்த்து
வாழ்த்தின
--------------------------------------------------------------------------------------------------------------------

பிம்பங்கள் 7

கனவுகள் காத்திருப்பதில்லை
இரவோடு போய்விடும்
மாலையும் நமக்காக நிற்பதில்லை
இரவில் கலந்து விடும்
ஆனால்
நினைவுகள் நீங்குவதில்லை
நெஞ்சோடு வாழும்
நினைவுகளும் உணர்வுகளும்
நெஞ்சின் சத்திய பிம்பங்கள்
அன்பு பாசம் நேசம் காதல்
அதில் தோன்றும் முகங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------

மருதத் தென்றல் 8

தாமரை குளங்கள்
தண்ணீர் தடாகங்கள்
தலை ஆட்டும் தென்னைகள்
பச்சைக் கம்பளம் விரிக்கும்
பசுமை புல்வெளிகள்

ஆலென்றும் வேல் என்றும்
அரசென்றும் மா என்றும்
வான் ஓங்கி நிற்கும் மரங்கள்
வற்றாது ஓடும் ஆறு
அலை வட்டமிடும் வாய்கால்
துள்ளி ஓடும் நீரோடைகள்
கதிர் சுமந்து தலை வணங்கி நிற்கும்
பசிய நெல் வயல்கள்
மருதத் தென்றல் தாலாட்டும்
மரகதச் சோலைகள்

தோளில் ஏர் சுமந்து செல்லும் உழவன்
தலையில் தண்ணீர் குடம்
சுமந்து வரும் இளம் பெண்கள்
குட்டைத் தண்ணீரில் துள்ளி விளையாடும்
கோமணச் சிறுவர்கள்
கட்டெருமை சாணியிட
ஏந்தி நிற்கும் சப்பாணி
குட்டிச் சுவர் அருகில் வெள்ளி மூக்கு வியர்க்க
பூர்வ ஜென்ம நினைவினில் மூழ்கி நிற்கும்
கழுதை அண்ணன்
இன்னும் எத்தனை எத்தனையோ அழகுகள்

எங்கு பார்த்தாலும் இனிமை பசுமை
எல்லாம் அழகியது
இதன் பெயர் கிராமம்

இயற்கை இயந்து
மனிதனுடன இருக்குமிடம்

எழுதவேண்டிய இலக்கியம் இல்லை கிராமம்
வாழ்ந்து பார்க்க வேண்டிய அனுபவம் கிராமம்
-------------------------------------------------------------------------------------------------------------------

ஹே ராம் -----பொய் தோட்டம் 9

அரிச்சந்திரனின் நாடகத்தில்
சத்தியத்தின் பாதை கண்டாய்

வாழ்கையை சத்திய
சோதனையாகப் பார்த்தாய்

சத்தியாகிரகம் எனும்
சாத்வீகப் போராட்டத்தை
உலகிற்கு தந்தாய்

அந்த அறப் போரினால்
இந்த நாட்டிற்கு
சுதந்திரம் வாங்கித் தந்தாய்

அந்தோ அண்ணலே
நீ சத்திய வழி நின்று வழங்கிய
சுதந்திரத்தில் திளைக்கும்
இந்த தேசம்
இன்று
பொய்கள் பூத்துக் குலுங்கும்
தோட்டம்
ஹே ராம் !
--------------------------------------------------------------------------------------------------------------------
இறைவன் வரைந்த ஹைக்கூ 10

ஹோன்ஷு
ஹொக்கைடோ
க்யுஷு
ஷிகோகு
நாலு தீவு
நாலு கவிதை
ஜப்பான் எனும்
நாடு
நீலத் திரைகடலில்
இறைவன் வரைந்த
ஹைக்கூ
--------------------------------------------------------------------------------------------------------------------

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-14, 5:41 pm)
பார்வை : 202

மேலே