பெண் சுதந்திரம் - பேச்சில் மட்டும்

பெண் சுதந்திரம்…..
பூமிக்கு ஒரு புத்தகமாய்
புண்ணியத்தின் கோடியாய்
பெண்ணினத்தை சாமியாய்
பேசுகின்றோம் பெயருக்காய் ;
பட்டணத்தை விட்டுவிட்டு
பாசமென்னும் மண்ணுக்கு
அன்புஎன்னும் பொருள்தேடி
அலைகின்ற நேரத்தில்..,
மனமென்னும் கண்ணுக்குள்
மாட்டிக்கொண்ட தொருகாட்சி
மண்டியிட வைத்துயென்னை
மாறி மாறி விட்டதடி..
கருவேலங் காட்டுகிடையில்
கரும்பாறை கல்லின்மேலே
அமர்ந்தாடும் சிட்டுக்களின்
அலங்கார ஆட்டங்கள்..
பச்சையவள் நிழலின்கீழ்
பள்ளிக்கூடம் தானமைத்து
பாடமொன்றை நடத்துகிறார்
பாசத்தின் சகோதரிகள்..
துவண்டுவரும் உள்ளமது
தூரத்தில் இருந்தாலும்
என்றைக்கும் கண்மணிகளாம்
தந்தைக்கு பெண்(மணி)கள்..
சுதந்திரத்தை வாழவிட்டு
சொர்கமென ரசித்துவிட்டு
வயதுவந்த நேரமுதல்
வாயில்லா ஜீவனைபோல்
கட்டிபோட்டு வளர்த்திடுவார்
பூட்டிவைத்த மாடுபோல;
வெட்டியென்று வீட்டுக்குள்ளே
வேதனையும் கொட்டிடுவார்..
அக்கறையாய் சொல்லிவிட்டு,
அடுப்படியை ஒதுக்கிவிட்டு;
ஆணுக்கு அடிமையென்ற
அசிங்கம்தரும் ஆதிக்கமேன் ..?
பாரதியின் சுதந்திரத்தை
பாடத்தில் படித்து (விட்டான்....ன்... ..)
பாவேந்தர் பாக்களையும்
பழிசொல்லி தூக்கிலிட்டான்..!
பெரியாரின் வேதமெல்லாம்
பெற்றவுடன் தான்மறந்து
அதிகார வர்க்கமென
ஆணவத்தில் வாழுகின்றான்..!
சிவன்பாதி சக்திபாதி
செவிதன்னில் கேட்டுவிட்டு,
சமபாதி சரித்திரத்தை
சாக்கடையில் போட்டுவிட்டான்..!
பத்துமாத சுமையிலேயே
பெற்றெடுத்த அன்னையன்று
பாரமென்றுப் பார்த்திருந்தால்
பாடையில்நீ போயிருப்பாய்..!
பொட்டுவைத்து காத்திருக்கும்
பொருமையெனும் தாரமென்று
போட்டுடைத்த ரகசியம்தான்
போற்றுகின்ற ஆண்வர்க்கம்..!
உடலுக்குள்ளே உயிர்தாங்கும்
ஒருசக்தி உனக்கிருக்கா..? ..
பெண்ணொன்று சொல்லாமல்
ஆணுக்கு புகழிருக்கா..?.
சிந்திப்போம்....!