2050-ல் விவசாயம் -Mano Red
அன்று வருடம் 2050..
நவீன பூமியை
இடமும் வலமுமாக
ஒரு கேள்வி சுற்றி வந்தது,
'விவசாயம் எப்படி இருக்கும்'என.
துரதிஷ்டவசமாக
விவசாயம் தெரிந்த அவனும்
உயிரோடிருந்ததால்
அன்று கண்டிருந்த காட்சிகளோடு,
வெகுகாலத்திற்குப் பிறகு
பசுமை நினைவுகளுக்குள்ளும்,
பச்சைப் புல்களுக்குள்ளும்
பாதம் புதைப்பதாய்
மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!!
அவன் விழித்தது தான் தாமதம்
அந்தரத்தில் தொங்கிய
இயந்திரத்தில் உணவு பிறந்தது,
அறிவியலுக்கு கொஞ்சமும்
அறிவில்லை,
தன் அகல வாய்க்குள்
இயற்கையை விழுங்கி விட்டு
இப்போது அழுவதை நினைத்து
அவன் சிரித்தான்...!!
இயந்திர உலகில்
விவசாயம் பற்றிய
செய்முறை விளக்கம் இருந்தது,
ஆனால்
செய்வதற்கு தான் ஆளில்லை,
ஒருவரை ஒருவர்
முகம் பார்த்து விழித்த போது
விவசாயம் தெரிந்த அவனை பார்த்து
அனைத்து கைகளும் நீண்டது..!!
அவன் மட்டுமென்ன அந்த இறைவனா..?
விவசாயத்திற்கு நிலம் வேண்டுமே
எந்த கட்டிடம் இடிப்பான்,
நீர் தேவைப்படுமே
எந்த அறிவியலை கேட்பான்,
உழவு தெரிந்த உழவனை
எந்த கிரகத்திலிருந்து அழைப்பான்..?
அவன் புலம்பினான்....
இந்த கெரகம் பிடித்த மனிதர்களுக்கு
ஒரு மண்ணும் தெரியாத போது
எந்த மண்ணை அள்ளி
தலையில் போட்டுக் கொள்வது..?
பறக்க பழகாத
அந்த மனித குருவிகளிடம்
எந்த இரையை தேட பயிற்சி தருவது..?
மிச்சமிருந்த அவனும் அழுகிறான்,
விவசாயம் ஒன்றும்
விஞ்ஞானம் போல
விளையாட்டு இல்லை
சோதனை ஓட்டம் விடுவதற்கு,.!
முப்போக வரலாறு பற்றி
என்ன சொல்வது
இந்த நவீனத்தை நம்பிய
விஞ்ஞான அடிமைகளிடம்.....!