வறுமையில் காதல்

வறுமையில் காதல் ...அழகிலும்
அழகு ..!!

உண்மையில் கண்ணீர் துளியில்
சந்தனத்தை கரைத்ததைப் போல....

மதில் சுவரெல்லாம் ஒன்று மில்லை ..
ஐந்தடி விட்டம் கொண்ட அந்த
வட்டமான ஓலைக் குடிசை தான் .
அவர்களின் மாடமாளிகை ..!!

இவர்கள் நிச்சயம் வினோத மனிதர்கள்
இரவெல்லாம் விரதம் பிடிப்பார்கள் ,கேட்டால்
அந்த வீட்டில் வருஷமெல்லாம் கார்த்திகையும்
மார்கழியும் மட்டும் தானாம்....!!

அட..இந்த குடிசை மாளிகையின் காவலாளிகள்
இரண்டு வெள்ளாடும் அப்படித் தானாம்..
இவர்கள் விசுவாசம் ஏனோ சரித்திரத்தில்
இடம் பெறவில்லை ..!!

மாளிகையின் சமயலறையில் அவளும் ;
வரவேற்பறையில் அவனும்; இடையில்
யாருமில்லை ..தனிமையைத் தவிர..!!

மின்சார விளக்கெல்லாம் அங்கே ;
மிகவும் ஆபத்தானதாம்...எனவே ..

மண்ணெண்ணெய் என்னும் ஆடம்பர
திரவம் இருக்கும் போது லாந்தரும்..!

இல்லாத போது இவர்களுக்காகவே
படைக்கப்பட்ட உருகி அழும் மெழுகும்..
தான் ..

அந்த அழுத்தமான இரவுகளை அழகாக
அலங்கரிக்கும் ஒளி ஜாம்பவான்கள்....!!

கணவன் -மனைவி இருவரும்
புரியாத மதத்தைச் சேர்ந்தவர்கள் ..!!

ரேசன் கடையில் இலவச வேட்டி
சேலை கொடுக்கும் போது தீபாவளி;
பொங்கல் கொண்டடுவார்கள் ..!

தனிமை கூத்தாடும் ராகத்தில் ..அவள்
கண்கள் பாட்டுப் பாடும்..!!

அவனின் அவள் தோல் வெள்ளை இல்லை ;
இதழ்களில் மதுரம் இல்லை; இடை
ஒன்றும் கொடி இல்லை..

ஆயினும் அவன் கேட்கும் சங்கீதம்
அவள் மட்டுமே...!

அங்கே அழகுக்கு இலக்கணம்
வறுமை...!!

அவளது காய்ந்து போன இதழ்கள்
ஆசையை கடிந்து கொள்வது
அவன் பெயர் மட்டுமே..!!

கருஞ் சாம்பல் உடல்; தசைப்
பிடிப்பு பகுதியில் சுருக்கமுடன்
தழும்பு;மெலிந்து போன வயிறு...!

ஆயினும் அவன் தான் அவள்
ரசிக்கும் ஆணழகன்..!!

ஏனென்றால்,வறுமையில் காதல் ...
அழகிலும் அழகு ..!! உண்மையில்
கண்ணீர் துளியில சந்தனத்தை
கரைத்ததைப் போல....!!

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (30-Dec-14, 9:28 pm)
Tanglish : VARUMAIYIL kaadhal
பார்வை : 242

சிறந்த கவிதைகள்

மேலே