அலையும் காதலும் - ஒரு உணர்வு

காதலதின் ஆழமதை
கரைமீது நானெழுத
களவாணி நீயின்று
களவாடி போனாயோ..!
அழியாத மனதுக்குள்
அனுமதி யில்லாமல்
ஊடுருவி விட்டாயோ
உருமாறு முறவாக..!
கண்ஜாடை முன்னாடி
காணாது பலகோடி..
வாராத நிலவன்று
வந்தாயே எனைதேடி..!
ஆழ்கடலி னாசையெழ
அலையாக வந்துவிட
அவள்பாத சுவடுகளை
அலங்காரம் செய்தாயே..!
சத்தமிடும் கொலுசுக்கு
முத்தமிட்டு போனாயே
சங்கதிகள் மாறாமல்
சங்கீதம் பாடிவிட்டு..!
காற்றோடு உறவாடி
கன்னியின் தேகமதை
குளிரூட்டி வைத்துவிட
கோமாளி வேடங்கள்..!
புதிராக நிற்கையிலே
புயலாக வந்தாயோ
பொருமை போதுமென
போராடும் மனதுக்குள்..!
பாராத என்னுள்ளம்
பாடமென சொல்லிவிட
பாதிவேலை செய்தாயோ
பாவையென் தோள்சாய..!
ஆயிரமாய் காதலரை
அழகாக்கி விட்டாயே
அலையாக கரையேறி
அக்கறையே எனசொல்லி..!
உயிராக சேர்ந்தார்கள்
உலகத்தில் பலகோடி
உடலெனும் உறவுக்கு
விலைபேசி சிலகோடி..!
அறியாத பருவத்தில்
அரும்பான மீசைக்கு
அழிவாகும் ஆசைக்குள்
பலியாகு மொருகோடி..!
உதவிக்கு ஓடிவந்து
உயிரூட்டம் தருகின்ற
காதலதை காவியமாய்
கரையேற்றி விட்டாயே..!
செய்நன்றி மறந்துவிட
சேயொன்று வந்தபின்
கைகழுவி விட்டாரோ
காரியமும் முடிந்துவிட..!
தவறேதும் செய்யாத
தவமோடு நீனிருக்க
அனலாக வருகின்றார்
ஆழ்கடலை தேடியே..!
தாசிக்கும் வேசிக்கும்
தாளாது னாசைக்கும்
தற்கொலை பாவத்தில்
தவறாக வுன்பெயரோ..!
யோசித்து பார்த்துவிட
யோகத்தில் நீயென்று
இன்பதுன்ப இயல்புக்கு
இதயங்கள் நீயன்றோ..!
உடலுக்கு முயிருக்கும்
உடன்பட்ட காதலது
உள்ளத்தை கொடுத்துவிட
உயிர்தனித்து போகாது..!
உண்மைக் காதல் வாழ்க...!