மருமகள் -இலங்கை தமிழில்

மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற

“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.

“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா

“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புறம் எனன...?” அதட்டியவாறு எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த சுதன் சுயநினைவு வந்தவனாய் பேந்த பேந்த முழித்தான்

“தேவையில்லாம கனவு கண்டிட்டு இருக்காம அந்த மூதேவின்ர நினைப்பயெல்லாம் துாக்கி குப்பைல போட்டுட்டு ஆகவேண்டியதை பாருடா” – அம்மா.

அப்போதுதான் தான் அம்மா வீட்டில் நிற்பதை உணர்ந்தான்.

நேற்று...

அலுவலகத்தில் அவசர அவசரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சுதனின் தொலைபேசி சிணுங்கியது. எடுத்து காதில் வைத்தவாறு

“சொல்லுங்கம்மா...” – சுதன்

“நான் உன்ர வீட்ல தான் நிற்கிறன். இன்டைக்கு உனக்கு அரை நேரம் தானே. சீக்கிரம் வீட்டுக்கு வா... சம்மந்தியாட்களையும் வரச்சொல்லியிருக்கன்...” – அம்மா

“ஏன்... என்னாச்சு... ஏதும் பிரச்சனையாம்மா...?” – சுதன்

“எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டு இருக்கேலாது. சீக்கிரம் வீட்டுக்கு வா சொல்றன் ...” – அம்மா.

அவசர அவசரமாக வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வேலையில் அவனது மன ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாது தினறினான். வீடு வந்து சேர்ந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மாமாவும் மாமியும் பேயறைந்தது போல ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். மாமியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. அம்மா சர்வசாதாரணமாக அமர்ந்திருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அறையின் உள்ளிருந்து மனைவி ஹாசினியின் விக்கல் சத்தம் கேட்டது. நடக்க கூடாதது ஏதோ நடந்திருக்கு என்பதை ஊகித்துக்கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் மாமாவும் மாமியும் எழுந்துகொண்டார்கள்.

“மாப்பிள்ளை....” – மாமா

“என்னம்மா ஆச்சு... ஏதாவது பிரச்சனையா...? – சுதன தாயை கேட்டான்.

“வாடா... வீட்டுக்கு வாறத்துக்கு இவ்வளவு நேரமா... சரி சரி வா... நம்ம வீட்டுக்கு போகலாம்...” – அம்மா

“என்னம்மா சொல்ற...?”

“நீயும் பெண்டாட்டியும் காதலிக்கும் போதே தலையால அடிச்சுக்கிட்டேன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று... கேட்டியா....? நீ தான் பிடிவாதமா நின்றாய். அப்பவே சொன்னனான் சீதனம் தந்தா தான் சம்மதிப்பேனனு. இவங்களும் சரின்னு தானே சொன்னான்க.....ஒரு வருஷமாச்சு... இன்னமும் தருவாங்க போல தெரியல.... அதான்... உன்னை கையோட கூட்டிட்டு போக வந்தன். அவங்க சீதன காசை தந்த பிறகு வரலாம். அதுவும் ஒரு வாரத்துக்குள்ள...”

“அப்பிடி என்ன அவசரம் அம்மா இப்ப காசுக்கு...?” – சுதன்

“தம்பி நீயாடா பேசுற... உன்னையும் மயக்கிப்புட்டாளுக போல... தெரியும் தானே உனக்கு உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறது. அடுத்த மாசம் கல்யாணத்தை வைக்க விரும்புறாங்க. அதுக்கு ஒரு கிழமைக்குள்ள அவங்க கேட்ட சீதன காசில பாதியாச்சும் கொடுக்கனும். அப்புறம் தான் திகதி முடிவு பண்ணணும்... எவ்வளவு வேலை இருக்கு... பெண்டாட்டி பின்னால சுத்திட்டு இருக்குற உனக்கு எங்க இதெல்லாம் தெரியப் போகுது... பேசிட்டு இருக்க நேரமில்லை. வெளிக்கிடு... வெளிக்கிடு...”

“மாப்பிள்ளை... நாங்க தரமாட்டம் என்று சொல்லல. இப்ப கொஞ்சம் இறுக்கமா இருக்கு... எப்பிடியும் தந்திடுறம் மாப்பிள்ளை... வாயும் வயிறுமா இருக்குற எங்க பொண்ணை விட்டுட்டு....” – ஹாசினியின் அப்பா

“அம்மா... ஒரு வாரகால அவகாசம் இருக்கு தானே. பார்த்துக்கலாம்மா...”

“ஒரு வருஷத்தில தந்திறாதவங்க தான் ஒரு வாரத்தில தந்திடப் போறாங்க... இவங்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். சரியான ஏமாத்துக்கார குடும்பம்டா... நாம நல்லாவே ஏமாந்திட்டம்...” – அம்மா

“அம்மா .. தயவுசெய்ஞ்சு....” சுதன் முடிப்பதற்கு முன்

“டேய்... நான் உன் அம்மாடா. எனக்கு நீ விளங்கப்படுத்தப் போறியா... இங்க பாரு... உங்கப்பா போயி சேர்ந்த பிறகு உங்க இரண்டு பேரையும் வளர்க்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். உன்னை கூட்டிகிட்டு தான் போவன். இப்ப நீ வரல்லன்னா... நேரா போயி குடும்பத்தோட மருந்து குடிச்சோ அல்லது கிணத்தில விழுந்தோ சாக வேண்டியது தான்... சொல்லிட்டன்... வாக்கு கொடுத்துட்டன். காப்பாற்றியாகனும்...” – அம்மா

அப்பிடியே தலைல கையை வைச்சுக்கொண்டு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தான்.

“இப்பிடிலாம் பேசாதீங்க சம்மந்தி...” – ஹாசினியின் அம்மா சொல்ல

“தயவுசெய்து நீங்க வாய் திறக்காதீங்க. வாயில இருந்து வர்ற எல்லாம் பொய், பித்தலாட்டம்... இனியும் உங்களை நம்ப தயாராக இல்லை” – சுதனின் தாய் கூறினார்.

கொஞ்ச நேரத்தில் சுதன் எழுந்து ஹாசினி இருந்த அறையினுள் சென்றான். சற்றுநேரமாகியும் வராததை பார்த்து...

“சுதன்... இங்க நான் ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கன். நீ அங்க என்ன பெண்டாட்டியை கொஞ்சிட்டு இருக்கியா...? இப்ப நீ வாறியா... இல்ல நான் போகட்டா...?” – அம்மா

“கொஞ்சம் பொறுங்கம்மா...” – சுதன்

சற்று நேரத்தில் சுதன் தனது உடமைகளுடன் வெளியே வரவும் அவனது தாயின் முகத்தில் அப்பிடி ஒரு மகிழ்ச்சி.

“மாப்பிள்ளை... ” – மாமனார் துடித்துக் கொண்டு ஓடி வரவும்

“அப்பா... அவர் போகட்டும் விடுங்க...” அறையினுள் இருந்து கொண்டு ஹாசினி கூறவும்

“நீ சும்மா இரும்மா. உனக்கொனறும் தெரியாது... மாப்பிள்ளை சொன்னா கேளுங்க...” – மாமனார் துடித்தார்

“அப்பா... சொன்னா கேளுங்க... அவரை தடுக்க வேண்டாம்...” ஹாசினியின் குரலில் அழுத்தமான உறுதி தெரிந்தது.

“அம்மா நீ சும்மா இரும்மா... தப்பா நினைக்காதீங்க... அவள் ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு....”

“பாருங்க... என்ன திமிறாக பேசுறாளுன்னு. புருஷன்காரன் போகிறானே என்று கொஞ்சமாச்சும் கவலை இருக்கா என்று... இது தான் உங்க பிள்ளை வளர்ப்பா...? நல்லது. நீ வாடா...”

தாயுடன் நடக்கலானான் சுதன்.

“என்னடா இன்னமுமா படுக்கையை விட்டு எழும்பல... சீக்கிரமா எழும்பி குளிச்சிட்டு வந்து சாப்பிடு. சம்மந்தி வீட்டுக்கும் ஒரு எட்டு போயிட்டு வரனும். கனக்க வேலை இருக்கு... சும்மா படுத்திருக்காத....”

“அண்ணாக்கு இன்னமும் அண்ணியோட நினைப்பு போல... இல்லையா அண்ணா... அண்ணி பாவம்மா....” பிரியா கூறினாள்

“அண்ணியாவது கொண்ணியாவது. இனிமேல் அவங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது. இனி யாரும் அந்த குடும்பத்தைப் பற்றி இங்க கதைக்க கூடாது. நீ ஒன்றுக்கும் யோசிக்காதைடா சுதன். உனக்கு நல்ல இடமா வேற இடத்தில கட்டி வைக்கிறன்...” – தாய் கூறினார்

“வேணாம்மா... அண்ணி பாவம். அவங்க ரொம்ப நல்லவங்க...”

“எனக்கு யாரும் புத்திமதி சொல்லத் தேவையில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்த்தா போதும்” –

நாட்கள் உருண்டோடின. பிரியாவின் திருமணம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்தேறியது. இரண்டு நாட்களின் பின்னர்...

“சுதன்... நான் உன்கிட்ட ஒரு விசயத்தை மறைச்சிட்டன்டா...””” – அம்மா

“என்னம்மா...?””” ”

“இன்னமும் இரண்டு வாரத்தில சம்மந்தியாட்கள் இங்க குடி வரப்போறாங்க... நாம வேற வீடு பார்த்து போக வேணும்...””” ”
“ம்... தெரியும்மா... வர்ற ஞாயிற்றுக்கிழமையே நாம நம்ம வீட்டுக்கு பேயிடலாம்.”

“உனக்கு தெரியுமா...? எனக்கு சொல்லவேயில்லை... எங்க.... உன் பெண்டாட்டி வீட்டுக்கு போக சொல்றியா....? அதான் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்றிட்டு வந்தாச்சே... இன்னமுமா அவளை நினைச்சிட்டு இருக்க...”

“அம்மா... என்னை என்ன கையாலாகாதவன் என்று நினைச்சியா... சீதனம் தரல்ல என்றதுக்காக என்னை நம்பி வந்தவளை விட்டுட்டு வர்றதுக்கு... நீங்க தனியாக கஷ்டப்படுவீங்க எனடதால ஹாசினியே தான் என்னை போய் நின்று எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னவள்.... உங்ககிட்ட முன்னாடியே சொன்னா சம்மதிக்க மாட்டீங்க என்று தெரியும். சும்மாவே உங்களுக்கு அவளை பிடிக்காது. அதான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்லுவம் என்றிருந்தேன்... ஆனா அவளுக்கு உங்கமேல அளவுகடந்த மரியாதை வைச்சிருக்கிறாள...”

“.........” அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா.

“.... அடிக்கடி கேட்டுட்டு இருந்தீங்களே சீதன காசு எப்படி ஒழுங்கு செய்தனி என்று... அதுவும் அவள் கொடுத்தது தான். நம்ம சொந்த பந்தங்களிட்ட கேட்டன். எல்லோருமே கையை விரிச்சிட்டாங்க. கடைசில அவள் தான் நாம இப்ப இருக்கிற வீட்டு பத்திரத்தை தந்தாள். அதை வைச்சுத்தான் எல்லாத்தையும் முடிச்சன். கொஞ்ச கொஞ்சமா பணத்தைக் கட்டி பத்திரத்தை மீட்டுக்கலாம்.”

“.........” இப்பவும் அதே அமைதியேர்டு கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா.

“என்னம்மா அமைதியாவே இருக்குறாய்...?”

“இல்லைடா... இவ்வளவு செய்திருக்கிறாள்... அவளை வாய்க்கு வந்தபடி பேசிட்டன். இப்ப எந்த முகத்தோட போய் முழிக்கிறது சொல்லு பார்ப்பம்...”

“அவள் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டாள். நீங்க வாங்க...”
கதைத்துக்கொண்டிருக்கும் போதே சுதனின் தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன்...

“அம்மா... ஹாசினி தான்... ஒரு நிமிஷம்...”

காதில வைத்தவன் அப்பிடியே தாயிடம் நீட்டினான்.

“உங்ககிட்ட தான் கதைக்கணுமாம்...”

“என்கிட்டயா... எதுக்கு...” என்றவாறு தொலைபேசியை வாங்கி காதில் வைத்தார்.

“மாமி... ஹாசினி கதைக்கிறன். எப்பிடி இருக்கீங்க...? நீஙக எதையும் யோசிக்க வேண்டாம் மாமி. நானே நேர்ல வந்து உங்களை கூட்டிட்டு வந்திடுவன். என்னால கன துாரம் பிரயாணம் செய்ய முடியாது மாமி... நீங்க நாளைக்கே இவர் கூட இங்க வந்திடுங்க. எல்லாத்தையும் ஆறுதலாக பார்த்துக்கலாம்.”

“இல்லைம்மா... நான் உங்க வீட்டுக்கு வந்து ஏதேதோ பேசியிருக்கேன்.... இப்ப எந்த முகத்தோட....”

“மாமி… நீங்க எங்க வீட்டுக்கு வரவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. சரியா... என்ர மனசில எதுவும் இல்லை. நீங்களும் எதைப்பற்றியும் யோசிக்காம வீட்டுக்கு வாங்க...” – ஹாசினி

-முற்றும்- ்

எழுதியவர் : கயல்விழி (5-Jan-15, 9:58 am)
பார்வை : 2127

மேலே