மனிதம் இல்லா மனிதன்
எத்தனை அழுக்கோ
ஏறிய வகையில்
சித்தம் இடறி
சிதறிய மனிதன்
நித்தமும் வாழ்வில்
தத்தளிப்புடனே ...
இத்தரை மீதே
இடர் படுகின்றான் .
வறுமை ஒருபுறம்
வதக்கிக் கொல்ல
சிறுமை ஒருபுறம்
சிறப்பெல்லாம் அழிக்க
ஆசை ஒருபுறம்
அமைதி கெடுக்க
நீசர் உறவால்
நேர்மை சிதைய
பூசல் மலிந்த
பூமியில் புழுவாய்
கூசிக் கூசிக்
குனிந்து நெளிந்து
வாசமே இல்லா
வகையே வாழ்கிறான் ...