சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

அளந்து ஆசான் ஆக்கிய வொன்றை
விளங்கி வந்து சூத்திரம் வேறாய்ப்
பிளந்து ஈயப் பின்னவர் போற்றி
வளர்ந்த தன்றோ பாத்திர மென்று !

குடிசைக் குள்ளே கொட்டிடு மற்கன்
வடிவம் நூறு வட்டமும் கூரும்
படிக்கச் சொன்னார் பட்டமு மீந்தார்
கிடுகை நீக்கும் திட்டம தில்லை !

பிழையாய் வேய்ந்த கூரையி னுள்ளே
பிழைக்க வந்து, பிள்ளைக ளுக்கும்
மழைநீ ரூற்றம் மாற்றிட வொண்ணா
வழக்க மென்றார் பின்னலி லோட்டை !

இரண்டு வர்ணக் கொம்புக ளோடே
இரண்டு காளை வண்டியு மோடி
இரண்டு வொற்றைப் பாதைக ளாகி
இரண்டும் சேரும் வோர்நிலை யாடி !

முளைத்த தண்டு வொன்றெனக் கண்டு
கிளைத்த கப்பைக் கிள்ளிட நன்றே !
விளையும் கன்றைத் தள்ளுவ தெல்லாம்
வளர்ந்து வாழை உய்திட வென்றே !

ஒருநூல் சேலை ஓவியம் நூறு !
அருகாய் வேர்கள் ஆணிய தொன்று !
பருகத் தண்ணீர் பன்நிலை நீர்க்கு !
"விருப்பம்" வீரம் மானுட வேர்க்கு !


* மீ.மணிகண்டன்
* 07-Jan-14

எழுதியவர் : மீ.மணிகண்டன் (7-Jan-15, 6:03 pm)
பார்வை : 176

மேலே