சாயம் வெளுக்கும் -கார்த்திகா
![](https://eluthu.com/images/loading.gif)
வானத்து நட்சத்திரங்களின்
வழிமொழிதலில் அவள் வருகை
நீண்டதொரு தெருவின் மாளிகையில்
உருகும் நிலவொளியும் கருகும்
மனமுங்கொண்டு வானையும் சுருட்டும்
யோசனையில் தன்னை மூழ்கடித்துக்
கொண்டிருந்த கள்ளனொருவனைக்
கைதட்டி அழைத்தாள்
தேவதையைக் கண்ட நேரத்தில்
தேனூறிய நாவுடன்
நெஞ்சத்தில் நஞ்சு கொண்டான் அவன்
உன்னைப் பற்றிச் சொல் !
தேவதையின் குரலுக்கு
கடைந்தெடுத்த விஷத்தில்
வார்த்த வார்த்தைகளே பதில்களாய்
எங்கள் ஓநாய்க் கூட்டத்தில்
ஆட்டுக்குட்டிகளுக்கு அச்சமில்லை
சாதிக்கு சிம்மாசனமுண்டு
சாதிப்பவருக்கு விலையுண்டு
பெண்ணுக்கு பெயர் உண்டு
பேசாத மொழிகள் அவள் சொந்தம்
நாட்டுப் பற்று உண்டு அது ,
ஜனகன மன வரை
வளர்ந்தவரை லாபம்
பெற்றது நஷ்டக் கணக்காகும்
முதியோர் வசிப்பிடத்தில்
சாதிகள் பார்ப்பதில்லை இங்கே
பச்சிளம் பாவைகளை சிதைப்பதில்!
மதங்கள் வேண்டிடாத
மனித பலியுமுண்டு
காதல் பிரிக்க மறுத்தால் !
நிறுத்தாமல் மொழிந்தவன்
சுற்றிலும் விழித்தான் ..
பொய் இல்லை !!
"பிணங்களைக் கொல்வதில்லை
தேவதைகள் !"