அணு அனல் நீர் காற்று

பகலென்ன இரவென்ன
பாவையுன் கண்ணொளியே
பாதை காட்டக் கூடும் . . . . .
தீராத பணிச் சுமையிலுன்
தீஞ்சுவை மொழி கேட்டுவிடின்
திசை எட்டும் வரை பறந்திடுவேன் . . . .
வளி மண்டலம் எங்கும்
வழி அமைத்து தினம்
வான் எங்கும் வலம் வருவேன் . . . .
குருவிகளும் கிளிகளும்
கூடவேப் பறந்து வர
குதூகலித்து தினம் மகிழ்வேன் . . . . .
ஓங்காரக் குயில் ஓசை
ஒய்யார மயில் நடனம்
ஓயாமல் தினம் களிப்பேன் . . . . .
புறாக்களைப் பறக்க விட்டுப்
பல தேசம் சுற்றி வர
புதுப் புது மடல் அளிப்பேன் . . . . .
அணு அனல் நீர் காற்று போல
ஆரணங்கு உன் விழி அசைவில்
அரிதான சக்தி காண்பேன் . . . . . .
இரண்டாவது உலகம் ஒன்று
இருந்தாலும் நன்று என்று
இறையிடம் கெஞ்சிக் கேட்பேன் . . . . .
ஒரே ஒரு வார்த்தை மட்டுமுன்
திருவாய் மலரக் கூறு நீயென்
திருமதி ஆவேன் என்று . . . . . .
அந்த ஒரு வார்த்தை போதும்
ஆயுள் எனக்கின்னும் நீளும்
ஆயிழையே என் ஆற்றல் கூடும் . . . . . .
****************