+நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதைப் போட்டி 2015+
நாளைய தமிழே! நாளைய தமிழே!
தமிழரின் நாவினில் தவழ்ந்திடு நாளும்..
தமிழினம் இருந்திட்ட தவத்தினால் கிடைத்திட்ட
வரமென வந்திட்டாய் வாழ்ந்திடு போதும்..
நாளைய தமிழா! நாளைய தமிழா!
நானிலம் போற்றிடும் நற்செயல் புரிவாய்!
நாமென இணைந்தே நல்வினை புணைந்தே
நாணய குணத்தால் நற்பயன் அடைவாய்!
வாடிடும் பயிருக்கு மழையெனப் பொழிந்திடு!
வாடிடும் உயிருக்கு உறவென இருந்திடு!
தவித்திடும் மனங்களுக் காறுதல் அளித்திடு!
துடித்திடும் மனிதருக் குதவியை கொடுத்திடு!
பிரிவினை சாதிகளை எங்களுடன் விட்டுடு!
பிரிவினை வாதங்களை அழிந்தொழிய வெட்டிடு!
தீண்டாமை பேதங்களை புறந்தள்ளி நசுக்கிடு!
வேண்டாத பிரச்சனைகளை தீயிலிட்டு பொசுக்கிடு!
மொழிவளர்ச்சி நம்வளர்ச்சி உணர்ந்துவிடு! உணர்வுகொடு!
பழியுணர்ச்சி பாவங்கள் மறந்துவிடு! மாற்றம்கொடு!
மொழிக்காக உழைப்போரை வணங்கிவிடு! வாழ்த்திவிடு!
வழிவழியாய் வருவோர்க்கு மொழிப்பெருமை கற்றுக்கொடு!
நாளைதமிழ் ஏழுலகம் ஆண்டிடவும் வேண்டாமே!
நாளைதமிழ் எட்டுத்திக்கும் கேட்டிடவும் வேண்டாமே!
நாளைதமிழ் சாதனைகள் படைத்திடவும் வேண்டாமே!
தமிழரெல்லாம் தமிழ்படித்தல் பேசிடல்மட்டும் போதுமே..!!!