குருதி குடித்தாள் காளிதேவி

ஒரு குட்டிக்கதை ..

குருதி குடித்தாள் காளிதேவி !!

ஒருவனுக்கு காளிதேவியை நேரில் பார்க்கணும் ன்னு ஆசையா இருந்துது.

அதை வேறொருவரிடம் சொன்ன போது, அருகில் ஒரு காளி கோயில் இருப்பதாகவும், மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தி பெரியது என்று சொல்லி, அங்கு போனால் அவன் ஆசை நிறைவேறும் என்றும் சொன்னார்.

அவனும் போனான்.

போகும் வழியில் வேறொருவரை சந்திக்க, அவரிடமும் தன் ஆசையை சொன்னான். அவரும் காளிதேவியை தரிசிக்கப் போவதாகக் கூறி, அவருடன் அழைத்து சென்றார்.

அந்தக் கோயில் சிறியது. அங்கு சென்று வழிபடும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று கோயிலைக் அடைந்ததும் அவன் புரிந்து கொண்டான்.கோயில் உள்ளே இருக்கும் கற்சிலையைக் கண்டு. "ஐயா .. எனக்கு காளிதேவியை உயிரோடு பார்க்க வேண்டும்" என்றான்.

"ஓ .. அப்படியானால் நீ அந்தப் பக்கம் செல்லவேண்டும்" என்று சொல்லி, கோயில் பலிபீடம் அருகில் வெட்டருவாளும் கையுமாக நின்று கொண்டு, சந்தனக் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீரப்பன் போல் பெரும் மீசை வைத்திருந்த ஒருவனை சுட்டிக் காட்ட, அவனும் அங்கு சென்று அந்த ஆளிடம் தன் விருப்பத்தைக் கூறினான். அதைக் கேட்ட அந்த முனியாண்டி, இன்று பூஜை முடிந்து விட்டது. நாளை அம்மாவசை. நல்ல நாள். நீ குளித்து விட்டு, உணவு ஒன்றும் சாப்பிடாமல் இங்கு வா என்று சொல்லி அனுப்பி விட்டார்.

மறுநாள், அந்த மீசை முனியாண்டி கூறியபடிக்கிக் குளித்து, உணவொன்றும் உண்ணாமல் அங்கு சென்றான். முனியாண்டி அவனை வரவேற்று கழுத்தில் மாலையிட்டு, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, அவன் தலையை பலிபீடத்தில் வைக்கக் கூறினான்.

இந்த பீடம் ஆடுகளை பலி கொடுப்பதற்கு அமைத்தது தானே. இதில் நான் தலையை வைத்தால் ஆட்டின் தலையை வெட்டுவது போல் என் தலையையும் வெட்டி விடுவீர்களே. அப்பொழுது நான் இறந்து விடுவேன் .. இல்லையா ? என்று கேட்க, முனியாண்டி ஆம் .. உயிருடன் காளிதேவியைப் பார்க்க நீ ஆசைப்படுவது உண்மையென்றால், நீ உயிர் துறக்க வேண்டும். சம்மதமா என்றான். மகாகவி காளிதாஸ், கவி காளமேகப் புலவர், தெனாலிராமன் இவர்கள் கதைகள் எல்லாம் படித்திருக்கிறேன். அவர்கள் ஒருவரும் இப்படி பலிபீடத்தில் தலையை வைத்ததாகக் எவரும் கூறவில்லையே. நேரில் தோன்றி அவர்களுக்கு ஆசி கொடுத்த தேவிகாளி எனக்கும் ஆசி கொடுத்தால் நானும் அவர்களைப் போல் கவிபாடி பெரும் புகழ் பெறுவேன் என்ற நம்பிக்கையில் தான் இங்கு வந்தேன் என்று கூறினான். அதற்கு மீசை முனியாண்டி, தம்பி .. நீ கூறுவதெல்லாம் சரிதான். அந்தக் காலத்தில் ஒருசிலர் கல்வி கற்று, பேரறிவு பெற்று, அகங்காரம் கொண்டவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக, காளிதேவியே தேர்ந்தெடுத்தவர்கள் தான் நீ கூறிய மூவர். ஆனால் இப்பொழுதெல்லாம் படித்தவன் படிக்காதவன் என்று வேறுபாடில்லாமல் எல்லோரிடம் அகங்காரம் இருப்பதால், கடவுள் எவரையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போய்விட்டது. எனவே, நீ இங்கிருந்து உடனே வெளியேறிவிடு என்று கூறினான். அவன் சற்று நேரம் சிந்தித்து விட்டு, இல்லை .. இல்லை .. முடியாது என்று கூறி, தன் தலையை பலி பீடத்தில் வைத்தான் .. காளிதேவி நேரில் வந்து அவனைக் காப்பாற்றி அருள்வாள் என்று நம்பி. இப்படியொரு வடிகட்டின முட்டாளும் உலகில் உள்ளார்களா என்று முனியாண்டி வியந்து நின்றான்.

அப்பொழுது ..

கையில் இருந்த வெட்டருவாள் கை நழுவி மீசை முனியாண்டியின் காலில் விழ, குருதி குடித்தாள் காளிதேவி !!

தன் ஆசை நிறைவேறவில்லையே என்று மனம் வருந்தி அவன் அங்கிருந்து வெளியேறி நடந்தான். அருகில் இருந்த டீக்கடையில் தமிழக அரசு வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டியில் கே.டி.வியில் கலைஞரின் பூம்புகார் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

அதில் கே.பி.சுந்தராம்பாள் கணீர் குரலில் பாடிய .. "தப்பித்து வந்தானம்மா .. பாவம் தனியாக நின்றானம்மா .. காலம் கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல் .. தப்பித்து வந்தானம்மா .. பாவம் தனியாக நின்றானம்மா" என்ற பாடல் அவன் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தது.

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (11-Jan-15, 4:34 pm)
பார்வை : 289

மேலே