இதுதானோ வாழ்க்கை - சித்ரா

அழுதிட பிடிக்கவில்லை..
உயிரிலே ஊறாத சிரிப்பை
உதட்டிலே ஓட வைக்கின்றேன்

ஒப்பனையிலே நம்பிக்கையில்லை..
இருப்பது போதும் என்று
கண்களின் வளையங்களை இரசிக்கின்றேன்

உண்மைகள் விரும்பவில்லை..
தூங்க மறுத்த இமைக்கு
பொய்களினாலே போதை ஏற்றுகின்றேன்

தோல்விகள் முடியவில்லை..
நாளை வரும் வெற்றியென்று
நம்பியே நாட்கள் கழித்திருந்தேன்

தனிமைகள் தீரவில்லை..
கவிதையெனும் துணையின் மேலே
காலை மாலை படுத்திருந்தேன்

தூரமும் தெரியவில்லை..
கற்பனை காதல் நினைவுகளோடு
கால் வலியறியாது நடந்திருந்தேன்

கற்பனைகள் களைக்கவில்லை..
பலிக்காத பகல் கனவில்
வலிக்கின்ற வாழ்கையிலே நானிருக்கின்றேன்

பகிர்வதனால் பயனுமில்லை..
இதுவும் அதுவும் வேண்டாமல்
இறைவன் எதிரே நிற்கின்றேன்

போதுமடா சாமியென்று..
புத்தக மொன்று வாங்கி
நித்தமென் நேரம் கழிக்கின்றேன்

எழுதியவர் : சித்ரா (12-Jan-15, 11:26 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 70

மேலே