நீலா சாரலி- 1 ~~ சந்தோஷ்

நீலா சாரலி ( பாகம் 1)
*******************************

வாழ்க்கை..! எதுவுமே இல்லாதப்போது, எதற்கோ வாழ வைக்கும். எல்லாம் இருக்கும் போது, எதற்கும் வாழ வைக்கும். சிலருக்கு எதற்கும் வாழ விருப்பம் தராது. எல்லாம் அவரவர் மனநிலைப்படி, ஆசை நிலவரப்படி நியதிகள் மாறும். உருமாறும்.
எல்லாம் மாயை..! எதுவுமே மாயை..! அன்பு என்பதும் கூட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காட்டப்படும் மாயைதான்.. ஒருவரின் அன்பு என்பது நம்மிடமிருந்து பிரியக்கூடிய நேரத்தில் அது நமக்கு கொடுமையின் உச்சமாக காட்டப்படும் உணர்ச்சிப் பிழையே அன்றி, அது ஒரு மாயை எனும் தெளிவு நமக்கு புரிவதில்லை., புலப்படுவதில்லை. காரணம் அன்பு அரவணைக்கும் , அணைக்கும் ... எரிக்கவும் செய்யும். இதையறியாமலே விரக்தி, விரக்தி என்று விரட்டும் மனப்பான்மையோடு மரணத்தில் கூட சமாதானம் தேடாமல் , சாந்தி தேடியலையும் அற்ப ஆவிகளாகி விடுவதே சிலரின் கோலமாகிவிடுகிறது.

---------------------------

நான் சாரலினியன், நெற்களஞ்சியம் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்.
தஞ்சை இரயில் நிலையம், இரயில் வருகைக்காக, இயல்பாக பயணிகளிடமிருக்கும் பரபரப்புடன் காத்திருந்தப்போது...

“ தம்பி.. ராஜா.... ஒரு உதவி செய்ய முடியுமா ? “ நடுத்தர வயதுக்கும் சற்று அதிகமான வயதுடைய ஒரு பெண். பார்த்தாலே வறுமையில் வாடுபவர் எனும் எழுத்து எழுதப்பட்ட முகம். கழுத்தில் நிறம்மாறிய ஒரு மஞ்சள்கயிறு, காதில் ஒட்டையிருக்கிறது, அணிகலன் இல்லை.

” தம்பி.. ! உங்களத்தான் கூப்பிட்டேன்.. ஏன் அப்படி முறைக்க பாக்குறீங்க ? “ அந்த அம்மா என் சிந்தை நிலையிலிருந்து உசுப்பினார்.

“ ஹாங் சொல்லுங்க! என்ன வேணும்.. ? டீ, காபி எதாவது குடிக்குறீங்களா? “

“ அய்யோ தம்பி.. என்னைப்பார்த்தா பிச்சைக்காரி மாதிரியா இருக்கு?. இருக்கும் இருக்கும்.. என் நிலம அப்படி....”

“ அச்சோ அம்மா... தப்பா நினைக்காதீங்க. நான் அப்படி நினைச்சி கேட்கல. சரி சொல்லுங்க என்ன உதவி ? “

“இந்தாங்க...இந்த தாளுல இருக்கிற நம்பருக்கு போன் போட்டு கொடுக்க முடியுமா ? “ மடித்து வைத்த ஒரு சிறு காகிதத்தை என்னிடம் கொடுத்தார். அதில்

-- நீ.வீ என பெயரோடு பத்திலக்க அலைப்பேசி எண் இருந்தது.--
அழைத்தேன்.

“ ஹலோ... ஹாய்.. மிஸ் நீவி யா ? “ என சொன்னவுடன் எதிர்முனையில் அழகாக... வசீகரமான இளையராஜாவின் சிம்பொனியாய் ஒரு சிரிப்பொலி...!

“ ஹா...ஹா..ஹா..ஹா.. என் பேரு நீவி இல்லீங்க. நீல விழி..! . பேரை சுருக்கி என் நண்பர்கள் இப்படி நீவி விட்டுட்டாங்க. சரி உங்க பேரு....? எங்கிருந்து பேசுறீங்க ? “ நீல விழியின் குரலுக்கு குயிலின் குரலும் தோற்கதான் வேண்டும். தோற்றது.

“ ஒஹ்..! நைஸ்.. அழகான பேருங்க. என் நேம் சாரலினியன். ப்ரெண்ட்ஸ் சாரலின்னு சார்ட்டா பண்ணிட்டாங்க. என்னை நீங்க சாரலின்னு கூப்பிடுங்க போதும். “ அவளிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது. முதன்முறையாய் முகம் தெரியா பெண்ணிடம் அவளின் குரலால் மயங்கி தவிக்கிறேன்.

” சாரலி... சாரலினியன்.. ம்ம்ம் அழகான தமிழ் பேருங்க. இப்போ நீங்க தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல நிக்குறீங்க. உங்க கூட ஒரு அம்மா இருக்காங்க. அவங்கதான் என் செல் நம்பரை கொடுத்தாங்க. சரிதானே மிஸ்டர் சாரலி ? “ நீல விழியின் குரலில் எனது பெயர் இப்போது எனக்கே தித்திக்கிறது.

“ ஹய்யோ..சான்சே இல்லீங்க நீலவிழி. எப்படிங்க செண்ட் ப்ரெசண்ட் கரெக்டா சொல்றீங்க ? செம ப்ர்லியண்ட் பா நீங்க. “

என்னருகிலிருக்கும் இந்த நடுத்தர வயது அம்மா என்னை ஒரு மாதிரியாகவே பார்க்க ஆரம்பித்தார். ஆனாலும் கண்டுக்கொள்ளாமல் என் செவியை நீலவிழியின் குரலுக்கு கொடுத்தேன்.

“ஹலோ.. ஹலோ சார்...! போதும் போதும்.. ஹா ஹா.. முன்னே பின்னே தெரியாதவங்கள இப்படியா பாராட்டுவீங்க.? ம்ம்ம் “

“ முன்னே தெரியாது.. பின்னே தெரிஞ்சுக்கலாமா .. லாமே... நீலவிழி... அண்ட் இருங்க இந்த அம்மா கிட்ட போன் கொடுக்கிறேன். “

“ இல்ல இல்ல மிஸ்டர் சாரலி.... ஒன்னும் இல்ல.. அந்த அம்மாக்கு நான் டிரெயின் இ-டிக்கெட் புக் பண்ணி அனுப்பியிருக்கேன்.. அவங்களுக்கு கோச் , சீட் நம்பர் எதுன்னு பார்த்து டிரெயின்ல ஏத்திவிட முடியுமா..? அதுக்குதான் யாரோ ஒருத்தர்கிட்ட கேட்டு எனக்கு போன் பண்ண சொன்னேன். அந்த யாரோ... நீங்கதான்..! ப்ளீஸ்ஸ்ஸ்”
குயில்காரி.. அழகு பெயருடைய விழிக்காரி கொஞ்சலுடன் கேட்டாலே உதவி செஞ்சிடுவேனே... இவள் கெஞ்கிறாளே...

“ யா... யா ஸூயர்... நீலவிழி “

“ சீட் நம்பர் D6 ல 34 சார்.. “

“ஓ எனக்கும் அதே கோச்தான்.. சீட் 37 தான்... ஒகே மேடம்.. நான் அம்மாவை பார்த்துக்கிறேன்.”

"மிக்க நன்றி சாரலி சார். தாம்பரத்திற்கு டிரெயின் வந்தவுடனே கால் பண்ணுங்க. நான் முடிஞ்சா வந்து அம்மாவை பிக் அப் பண்ணிக்கிறேன். “

“ அய்யோ நீலவிழி மேம்.. கண்டிப்பா வாங்க. அம்மா பாவம் இல்ல. கஷ்டப்படுவாங்க..” அவளை பார்க்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிட மனமில்லை எனக்கு.

“ ஹாங் ஆங்... ஆமா ஆமா அம்மா பாவம்தான் சார். ஒகே டேக் கேர். பை சாரலி “

அழைப்பை துண்டித்துவிட்டாள். என் இதயத்தில் ஒட்டிக்கொண்டாள் அந்த நீலவிழிக்காரி.
அவள் குரலின் இனிமையே சொல்கிறதே , அவள் ஓர் அழகி என்று. அழகியாக இல்லாவிட்டாலும் என்ன? அவள் என் பார்வையில், என் மனதில் இப்போதே அழகியாக காட்சியளிக்கிறாள். இதுவரை எந்த பெண்ணிடம் இப்படி “ ஜொள்” விட்டதில்லை நான். அதுவும் முகம் காணாத ஒரு பெண்ணிடம். என்னமோ தெரியவில்லை. இவள் என் வாழ்க்கையில் ஒரு வித மாற்றத்தை தருவாள். நம்பிக்கை ஏனோ வந்துவிட்டது. அது மூடநம்பிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் நீலவிழி என்னிடம் பேசிய இந்த தருணம்.. என்னுள் புதிய உற்சாகத்தை தருகிறது.

அவளை என் புத்தியில் நான் அசைப்போட்டுக்கொண்டிருக்கும் போதே... சென்னைக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இரயில் தஞ்சாவூர் இரயில் நிலையம் வந்தடைந்தது.

என்னிடம் உதவி கேட்ட அந்த நீலவிழிக்காரியின் அம்மாவை பத்திரமாக அவரின் பதிவு செய்த இருக்கையில் அமரவைத்து , . நான் பதிவு செய்த இருக்கையை வேறு ஒருவருக்கும் மாற்றிக்கொடுத்து விட்டு அந்த அம்மாவிற்கு அருகிலுள்ள இருக்கையில் நானும் அமர்ந்துக்கொண்டு பேச்சுக்கொடுத்தேன்.

“ தஞ்சாவூர் தான் உங்க சொந்த ஊரா அம்மா... ? “

“ ஆமா தம்பி... நீங்க என்ன வேலை.. என்ன ஊர் ? “

” நான் கம்யூட்டர் கம்பெனி வச்சிருக்கேன் அம்மா. அதுப்போக நான் ஒவியம் வரைவேன். இங்க தஞ்சாவூர்ல இருக்கிற கோயில்களை நேரில பார்த்து ஓவியம் வரைய வந்தேன் அம்மா. சொந்த ஊர் திருச்சி. சென்னையில ஆபிஸ் இருக்கு. “ அந்த நடுத்தரவயது பெண் கேட்காத கேள்விக்கும் பதில் சொல்கிறேன். காரணத்துடன் தான்.

“ நல்லது தம்பி.. ரொம்ப சந்தோஷம்.. “

“ நீலவிழி உங்க பொண்ணுதானே அம்மா...? “

“ இல்ல.. அவ என் பொண்ணு இல்ல. . ? “ அந்த பெண் சொன்னவுடன் எனக்கு முதல் ஏமாற்றம் அடித்தது. என்றாலும், நீலவிழியை பற்றிய அறியும் ஆர்வம் குறையவில்லை.

“என்ன மா சொல்றீங்க..? நீலவிழி உங்க பொண்ணு இல்லைன்னா.. எதுக்கு அவங்க உங்க மேல இவ்வளவு அக்கறையா இருக்கனும்..?. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.. ? “

“ ஹா ஹா தம்பி... அந்த பொண்ண பத்தி தெரிஞ்சக்கனும் அவ்வளவுதானே...........? “

” ஹி ஹி அப்படின்னு இல்லமா... இந்த காலத்தில இப்படி ஒரு பொண்ணான்னு யோசிச்சேன் ..கேட்டேன்... ஆமா நீங்க ஏன் சென்னைக்கு போறீங்க.. அவங்க எதுக்கு உங்களுக்கு டிக்கெட் எடுத்து தந்தாங்க ? “

“ நீலவிழி என்னை காப்பாத்தின தெய்வம் பா.. தெய்வம்.........................!! “ சொல்லும்போதே அந்த அம்மாவின் கண்ணில் நீர்த்துளிகள் நன்றியோடு வெளியேறியது..

------
அந்த தெய்வப்பெண்... சாரலினியனின் காதலியாக முடியுமா ? வரம் தருவாளா?


( தொடரும் )




-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Jan-15, 4:08 pm)
பார்வை : 311

மேலே