கும்மி பாட்டு

கும்மியடி பெண்ணே கும்மியடி
குலம் தழைத்து செழிக்க கும்மியடி!

முத்தின நெல்லை அறுத்துபோட்டு
களத்துமேட்டில் அடித்து கட்டு !
காவலனான உழவன் காலை
தொட்டு தொட்டு வணங்கிபுட்டு...! (கும்மியடி ...)

மாமன் மகன் மூடுபனி
மூடி படுத்த நெல்மணி
அமுக்கிபுட்ட அசதியில்
சாய்ஞ்சு கிடக்கா கண்மணி !
களத்துமேட்டில் அவுத்து போட்டு
தலையை நல்லா உலர்த்திக் கட்டு...! (கும்மியடி ...)

மூடிகிடக்கும் சிப்பிக்குள்ள
முத்து முத்தா பச்சரிசியுந் தானிருக்கும்புள்ள
பத்திரமாக எடுக்காட்டி பதராகக் கூடும்புள்ள
பதறாம நீயெடுத்து பக்குவமாக சேருபுள்ள...! (கும்மியடி ...)

பத்து மாதம் சுமந்த சம்பா
பதரானா வாழ்வே யாகும் வம்பா!
சிதறாம பாத்துக்கோ...!
சீக்கிரமா அடிச்சி தூற்றிக்கோ... ! (கும்மியடி ...)

அங்கே பாரு அம்சவேணி !!
சனி மூலையில கருக்குது!
சாய்ந்திரம்போல் இருட்டுது !
மழைவந்தா காரியந்தான் கெட்டது
அதுக்குள்ளே வைக்கோலை தனியாக பிரிக்கணும்!! (கும்மியடி ...)

ஏர் பிடித்த மாமனுக்கு சோறு பொங்கி கொடுக்கணும்!
என் வீட்டு காளைகளுக்கு வைக்கோல் போராக்கி வைக்கணும்!
ஐயிரண்டு மாதமா நல்லதூக்கம் இல்லையே!!
நெல்மூட்டையை வீட்டில் சேர்த்தா
அலுப்பு அசதி தானே அமுக்கும் தூக்கமே...!! (கும்மியடி ...)

வெள்ளையா வெள்ளையா சீக்கிரம் ஓடி வா !
விளைஞ்ச நெல்லை சாக்கில் அள்ளிவை!
பொனயல் ஓட்டும் காளைக்கும்
கொஞ்சம் கொஞ்சமா தண்ணி வை...!! (கும்மியடி ...)

முதல் படி நெல்லையெடுத்து
குலசாமிக்கு பொங்கல் வை!
அறுவடையை முடிச்சு தந்த
விவசாயிக்கும் படிநெல்லை அளந்து வை !! (கும்மியடி ...)

விடிஞ்சாத்தான் பொங்கலு!!
அதுக்குள்ளே எல்லாத்தையும் முடிக்கணும்!
வீடு பட்டி கழுவனும்! விளக்கை நல்லா தேய்க்கணும்!!
மாடு கண்ணு குளிக்கணும்! மஞ்சள் பொட்டு வைக்கணும்!!
புத்தரிசி படியெடுத்து புதுப்பானையில பொங்கணும்!!
எங்கஊரு மக்களுக்கும் பொங்க சோறு போடணும் !! (கும்மியடி ...)

தங்க மாரியம்மா !எங்கள் வாழ்வு செழிக்கவே
தையில் வந்துதிகிறா !
வளர்ந்து நிற்கும் மங்கைக்கெல்லாம்
மஞ்சள் தாலி கொடுக்கிறா!
மங்கலமாய் வாழவே மகிழ்ச்சிபொங்க கும்மியடி (கும்மியடி ...)

(பின்குறிப்பு: என்னால் எழுதப்பட்ட இப்பாடலின்று எனது கிராமத்தில் கும்மி அடித்து பாடபடுகிறதென்பதில் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கனகு )

எழுதியவர் : கனகரத்தினம் (16-Jan-15, 9:54 am)
பார்வை : 860

மேலே