திமிர் பிடித்தவள்-வித்யா
திமிர் பிடித்தவள்...!!!-வித்யா
பாரசீகப் பண்பாடென
நாடெங்கிலும் மதுக்கோப்பைகள்
உரசுகின்ற சப்தங்கள்
ஒரே பேரிரைச்சலாக
அந்த கிரேக்கத்தலைவனின்
காலொடிந்த தூதுபுறா
கடிதம் சுமந்து
நின்றிருந்தது
கடற்கரைக் காற்று
புடைப்புச்சிற்பங்களின்
தீண்டல்களில் முக்தி
பெற்றுக்கொண்டிருந்தது
ஏதோ வெறுப்பு
அவள் எண்ணங்கள்
ஆதாம் ஏவாளிடம்
வாக்குவாதம்
செய்துக்கொண்டிருந்தது
இரவுகள் கிழித்துக்கொண்டு
உறங்காக் கனவுகள்
காவலிருந்தது
உடை கேட்டு
ஒரு நிர்வாண சிலை
கதறிக்கொண்டிருந்தது
காற்றிறங்கிய பலூன்
சாவகாசமாக பூமி மீது
வந்திறங்கியது
எதையும் கண்டுகொள்ளாத
ஆறறிவு ஜீவி இரண்டு
இதழோடு இதழ்
கவ்விக்கொடிருந்தது
துப்பட்டாத் திரைக்குள்
நெருக்கங்களின் தூரங்கள்
குறைந்திருந்த போது
படபடப்பின் உச்சத்தில்
நடுக்கங்களுக்கு முகமூடி
அணிவித்து..........
இமை மூடித் திறப்பதற்குள்
அவளின் உள்ளங்கை
அவனின் கன்னங்களைப்
பதம்பார்த்திருந்தது.......!!
காமம் தரித்த
காதல் உதறி
திமிர் பிடித்தவளானால்
அவனுக்கு மட்டும்......!!