பிரசங்கி

தினம் கிடந்து உறங்கும்
சகலமுமானது
ஒருநாள் சடலமானது

மோகிக்குமுன்
முகர்ந்து பார்
மலர்களுக்கும் உன்போல் வலிக்கும்

வானவில்லுக்கே தெரியாத வர்ணங்களை
வகையிட்டுச் சொன்ன உன்கண்கள்
சகதியில் குளித்து
சந்தனத்தைப் பூசி
ராஜ தர்பாரை மேய்கிறது...

உன்மேய்ச்சல் நிலத்தில்
சர்ப்பங்களும் சாத்தான்களும்
மந்திரி பிரதானிகள்

நீ ஊரடங்கு உத்தரவு
ஊருக்கு போடாதே
உனக்கு மட்டும் போட்டுக்கொள் .

உன்னில் நாறிய நதியும்
கரைகளை மூடிக்கொள்ளும்
உன் பாவப்பட்ட சடலத்தை
புதைக்காமல் இருப்பதற்காக.

கோழிகளுக்கும் வியர்க்கும் விதியை
மனப்பாடப் பகுதில் சேர்த்தும்
இன்னும் பூஜ்யம் தாண்டாமல்
தோற்றுப் போகிறாய்

மலர்களைக் கொன்றதால்
மலர்களின் நீதிமன்றத்தில்
உனக்கு மரணதண்டனை

தேனீக்களை
பட்டினி போட்டதால்
தேவனின் ராஜ்யத்தில்
உனக்கிடமில்லை

கொலையும் செய்வாய்
உன்னை அலங்கரிக்க
மேனியை பட்டால் மூடினாலும்
மரித்த பட்டுப் பூச்சிகள்
மரத்துப் போவென்று சாபமிடும்.
செத்தபின்னும்......
சிறுநூலாய் மாறிய பின்னும் ....

உன் மறுதலிப்பில்.
ஐம்பூதங்களும் அகன்றன
தென்றல் தீயாய்ச் சுடும்
வானம் நெருப்பள்ளி வீசும்:

நீநடந்த பாதையெங்கும்
எலும்புகளின் சத்தம்
அலைவரிசை குறையாமல்
அழுகைச் சத்தம் விடாது கேட்கும்.

முல்லைப்பூ முல்லைப்பூவென்று
கூவிச் சென்றவனின்
முதுகில் அடித்தாய்:
உன் மனைவியின்
பல்வரிசை அழகை
பகிரங்க ஏலம் விட்டானென்று....

நிர்வாணம் கண்ட போது
சிற்பி உளி தூக்கினான்:
ஓவியன் தூரிகை தூக்கினான்:
கவிஞன் கலன் தூக்கினான்:
நீயோ காமம் தூக்கினாய்.

எதுவாக பார்க்கிறாயோ
அதுவாக மாறுகிறாய்
பாராத போதோ
பரப்பிரும்மம் ஆகிறாய்

அம்புதுளைக்கா அம்பாரியில்
அமர்ந்து நீ வந்தாலும்..
அம்பாரியே அம்பாகி
உன்னெஞ்சைத் துளைக்கும்.

ஆதியில் சொன்ன வார்த்தை
அப்போது நினைவு கூர்வாய்:
தினம் கிடந்து உறங்கும்
சகலமுமானது
ஒருநாள் சடலமானது
...............................................................
..............................................................
பிணமெடுத்து சென்ற
இழவு வீட்டு முற்றம் போல்
அந்த மைதானம்
அமைதியாய் இருந்தது
அந்த பிரசங்கியின்
பிரசங்கத்திற்குப் பிறகு...

எழுதியவர் : சுசீந்திரன். (25-Jan-15, 3:43 pm)
பார்வை : 98

மேலே