உருளைக்கிழங்கும் potato வும்

உருளைக்கிழங்கை
உருளைக்கிழங்கு
என்பதைவிடவும்
potato வை
potato என்பதுதான்
எனக்குப் பிடிக்கிறது !
இரண்டும்
ஒன்றுதான் எனினும்
இரண்டும்
வெவ்வேறானவை
என்பதால்
எனக்கு
முதலாவதை விட
இரண்டாவது பிடிக்கிறது !
நீங்களோ அல்லது
யாரோவோ
potato எனும்போது
ஒரு முடிச்சு
அவிழ்வது போன்றதொரு
நெகிழ்வுணர்வை
என் பெருமூளையின்
சாம்பல் திட்டுக்கள்
அடைகின்றன !
கிளிக் என்ற
சப்தத்துடன்
ஓர் உற்சாகக்கதவு
என்னில் திறக்கிறது !
யு.கே.ஜி மதியங்களுக்கு
என் ஆயா
கட்டிக்கொடுத்த
புளி சாதத்தின்
கம கம வாசனையை
என் இதயத்தில்
உணர்கிறேன் !
உங்கள்
கீழ் உதட்டுக்கும்
கீழிருக்கும்
தாவாய்க்கட்டையின்
வளைந்த கோட்டில்
வியர்வை மினுங்க
நீங்கள்
potato எனும்போது
எனக்கு
மிகப்பிடித்தவராய்
மாறிவிடுகிறீர்கள் !
இந்த
potato எனும்
உச்சரிப்பு
உங்கள் காயத்ரி மந்திர
உச்சரிப்புகளை விட
எவ்விதத்திலும்
குறைந்ததல்ல.
தினமும்
இருபத்தேழு முறை
காரிய சித்திக்காக
potato வை
உச்சரித்துச் செல்லவும்
உத்தேசமெனக்கு !
மேலும்
potato வை
potato என்று
ஒரு பெண் சொல்வது
இன்னும் அலாதியானது,
காரணம்,
அவ்வாறு சொல்லும்
ஒரு பெண்
என் யு.கே.ஜி
சித்ரா மிஸ்ஸை
ஞாபகப்படுத்தி விடுகிறாள் !
தாவாய்க் கட்டையின்
வளைந்த கோட்டில்
வியர்வை மினுங்க
potato சொன்னதற்காகவே
சித்ரா மிஸ்ஸை
நான்
அப்போதே காதலித்தேன்
எனும் பொருந்தாக்காமம்
இப்போதைக்கு
இங்கே தேவையில்லை.
என்று செல்லும்
இந்த உரைநடையை
நான் ஏன்
இப்படி
உடைத்து உடைத்து
எழுதுகிறேன் எனில்
இஃது
புதியதொரு
கவி வடிவத்தினை
தமிழ் கூறும் நல்லுலகிற்கு
நல்கிவிடாதா என்கிற
நப்பாசையேயன்றி
வேறில்லை !
மேலும்
எனக்குள்ளிருக்கும்
இந்த potato போல
உங்களுக்குள்ளும்
ஒரு தக்காளி
இருக்கலாம்........
எனவே,
tomato வை
tomato என்பதை விட
தக்காளியை
தக்காளி என்பதுதான்
எனக்கு
மிகப்பிடிக்கிறது
என்று தொடங்கக்கூடும்
உங்களுக்கான
அந்தக் கவிதை !

எழுதியவர் : குருச்சந்திரன் (28-Jan-15, 1:04 am)
பார்வை : 287

மேலே