கரு
சரியான நேரங்களில்
நான் தட்டிய பலகையும்
இக்கைத்தட்டலுக்கு
காரணமென்ற சிறு
கர்வமுண்டு.
நீங்கள் உருகி உருகி
இரசிக்கும் முத்தக்காட்சிக்கு
நாயகியின் உதட்டுச்சாய
விகிதத்தை எத்தனைமுறை
சரிபார்த்திருப்பேன்.
பிரபல நடிகர் செய்யும்
தவறுக்கு சினம் உறுஞ்சும்
பஞ்சாக இருந்திருக்கிறேன்.
அரைகுறை ஆடையோடு
அவள் பழரசம் அருந்தும்வரை
வசனக்காகிதத்தில் இருந்து
கவனம் சிதறாமல்
என்னாலிருக்க
முடிந்திருக்கிறது.
என் விழிகளாடா
பென்டுலம் தான்
தொடர்ப்பிழையில்லா
இக்காட்சிகள்.
திருட்டு எனக்கு
பழகிப்போன
இருட்டு.
உறவுகளுக்கு
உருப்படாதவன்.
காதலியின்
எப்போ சாதிப்ப என்ற
வதைப்புக்குச் சொந்தக்காரன்.
அப்பாவின் போதுமென்ற
புறக்கணிப்பில்
பலமுறை தப்பித்தவன்.
எல்லாம் தாண்டி
முட்டைக்கருவாய்
கனவுளை அடைகாக்கிறேன்
கொட்டையெழுத்தில்
ஒருநாள் என் பெயர்
திரையில் தோன்றவே.
ஆம் நான்
உதவி இயக்குனர்.
--கனா காண்பவன்