சின்ன சின்ன ஆசை - 2

தகப்பனாய்
நீ தலைகோதிவிட
குழந்தையாய் உன்மடிமீது
நானுறங்க ஆசை...
தாயாய்
உன் ருசியறிந்து
பசியாற்றி...
உன் கவலைதுறந்து
உறங்கவைக்க ஆசை...
தோழியாய்
உன் தோள்சாய்ந்து
தோல்வி தொலைக்க ஆசை...
சகோதரியாய்
உன்னிடம்
சண்டைபிடிக்க ஆசை...
மாணவியாய்
நின் பெயர்
தழைக்கச் செய்ய ஆசை...
காதலியாய்
காதல்மொழி கேட்டு
நின் காதலில்
கசிந்துருக ஆசை...
மந்திரியாய்
ஆலோசனை
வழங்கிட ஆசை...
மனைவியாய்
உன் மனம் நிறைத்து
நின்கரு சுமக்க ஆசை...
பக்தையாய்
நின் பாதமலர்களை
கண்ணீர்முத்துக்களால்
அலங்கரிக்க ஆசை...
நின் கரம்கோர்த்து
சிகரம் தொட ஆசை...
இறக்கும் வரை
நம் கரங்கள்
இணைந்திருக்க ஆசை..
முதுமையிலும்
முன்னுதாரணமாய்
வாழ்ந்துவிட ஆசை...
மரணமில்லா
என் மன்னவன்
உன்மார் சாய்ந்து
உயிர்துறக்க ஆசை...!!!