நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி - இராஜ்குமார்
 
 
            	    
                நெஞ்சு பொறுக்குதில்லையே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூளைப் பிளவிலும் அழுத்தம் செலுத்தும் 
விற்பனைக்கல்வி - சேவையைப்  பரப்புமா ..?
கழிவானத் தெருவிலும் விளம்பரம் ஒட்டும்
அரசியல் - வறுமையை ஒழிக்குமா ..?
உண்மை  புதைத்து பணத்தில் மிதக்கும் 
ஊடகம் - உயிர்வலியை உணர்த்துமா  ..?
காமமே காட்சியாக நாகரீகம்  நசுக்கும் 
திரைகள் - புரட்சியைப்  புகட்டுமா ..?
நெகிழி நிறைத்து மதுவில் மடியும் 
மனிதன் - வாழ்வியல் சிற்பியா ..?
பிழையின் உருவாய் உழைப்பைத்  திருடும் 
ஆடம்பரம் - உயிர்த்துளியைச்  சுரக்குமா ..?
ஊழல் ஊட்டலில் வன்முறை வடிவமான 
சட்டம் - சமத்துவம் எழுதுமா ..? 
பல்லுயிர் அழித்து மரத்தைச் சிதைக்கும் 
உலகமயம் -  உயிர்த்தலை விதைக்குமா ..?
சுவாசம் திணித்தும் உயிர் சுருங்கி 
பிணமாகும்முன் - நீர்மூல நதியாவோம் ...
நிலம் பிளந்து எரிமலைப் பிழம்பில் 
மூழ்கும்முன் - விவசாய வேராவோம் ....
- இராஜ்குமார்
 
                     
	    
                
