ஆதலினால் காதல் செய்வீர்
காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;
காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு;
காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்;
”இல்லை; முடியாது” இதுவே விடையானால்
”இல்லை; காதலியுடன் இல்லை காதல்”
விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்!
கண்டவர் விண்டிலர் கடவுளையும்; காதலையும்
தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்;
ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்;
காண முடியாது காட்சியாய் உணர்வுகளை;
காண முடியாது காட்சியாய்க் கடவுளையும்..!!
ஊனாகி உணர்வாகி உயிருமாகிய காதல்போல்
நானாகி நீயாகி நாளும் தவறாது
ஆட்சி நடாத்தும் அவனில்லை என்றால்
காட்சிக்கு வராத காதலுணர்வும் பொய்யாமோ?
கண்ணுக்குள் எத்தனைவகைக் கண்ணீர் வழிகின்றன
பெண்ணுக்குள் எத்தனைவகைப் பேரின்பம் பொழிகின்றன
மூக்கு எத்தனைமணம் முகர்ந்து நுகர்கின்றன
நாக்கு எத்தனைமொழி நாளும் பகர்கின்றன
உன்னையும் உன்காதலை(யும்) உணர்ந்த காதலர்காள்
உன்னையும் உன்காதலரை(யும்) உருவாக்கிய ஒருவனை
காதலின் உணர்வுபோல் காண இயலாது;
ஆதலினால் காதலிப்பீர் ஆளும் கடவுளையும்
“கவியன்பன்” கலாம்