பயணியர் நிழற்குடை

கவியவரே! சற்று நில்லுங்கள்!
என்னை பற்றியும்
ஒரு கவிதை சொல்லுங்கள்!
என்னை
ஊருக்கு வெளியிலோ
ஒதுக்கு புறங்களிலோ
நிறுத்திவிட்டு
வருபவர்கள் எல்லாம்
அமர்ந்து விடுகிறார்கள்!
இரவு வந்தால்
நின்று கொண்டே தூங்குகிறேன்!
விடியுமுன் கேட்கும் இரைச்சல்களில்
விழித்து கொள்வேன்!
எத்தனையோ பேருந்துகள்
என் நிறுத்ததிலே!
வருகிறார்கள்!
போகிறார்கள்!
இந்த ஊர் மனிதர்கள்
எனை எவரும் கண்டு கொண்டதில்லை!
பெற்றவர்கள் அறியுமுன்
அறிந்துவிடுவேன்
காதல்களை!
வேண்டுமென்றால்
பாருங்கள் சிலர்
என் மீது கரி கட்டையாலோ!
கீறும் கல்லாலோ!
தங்கள் காதல் சொல்ல
என்னை காயபடுத்தியுள்ளதை!
சில நேரங்களில்
காம காட்சிகள்
உரசல்கள்
முத்தங்கள்
கோபங்கள்
கள்ள உறவுகள்
என்று எனக்கு
இந்த ஊர் பற்றிய
நிறைய உண்மைகள்
தெரியும்!
போதையில் தள்ளாடி
இங்கு வந்து உறங்கியவன்!
எச்சில் முழிந்து
என்னை அசுத்தமாக்கியவன்!
விளம்பர படுத்தியவன்!
எங்கோ மிதித்ததை
இங்கு வந்து துடைத்தவன்!
என்று இந்த ஊரின்
எத்தனையோ முகங்கள்
எனக்கு பரிச்சயம் உண்டு!
சரி! போய் வாருங்கள் !
இரவு தாமதமாகி
விட்டது!
நான் நின்று கொண்டே உறங்குகிறேன்!
விடியுமுன் வந்து
இரைச்சலிட்டு எழுப்பி விடுவர்
இந்த ஊர் மனிதர்கள்!
என்னை
ஊருக்கு வெளியிலோ
ஒதுக்கு புறங்களிலோ
நிறுத்திவிட்டு
வருபவர்கள் எல்லாம்
அமர்ந்து விடுகிறார்கள்!