கைம்பெண்ணே உனக்கும் வாழ்வு வரும்

பூமி உனக்கு சொந்தமில்லை
உடன் கட்டை ஏறு
என்று சொன்ன உதடுகள்......!
காலச்சுவடாகாமல்
காற்றில் கரைந்து மாறியது
பூவும் பொட்டும்
உனக்கு சொந்தமில்லை என்று.....!

அகிலமே ஆனந்த தாண்டவம் ஆடினாலும்
அரங்கின் ஓர் ஓரத்தில் அமைதியாய்
அமங்கலி என்ற அரியணையில்......!

கைம்பெண் என்ற எழுத்தில் கூட
இரண்டு பொட்டு இருக்கும்......!
உன் நெற்றி பாலைவனமாய்
ஸ்டிக்கர் பொட்டு மட்டும்
விளம்பரபலகையாய்.....!

சோகத்தின் கீதமாய்.....!
மதிப்பிலா மங்கையாய்.....!
வீட்டில் ஒரு எண்ணிக்கையாய்.....!
வெறிச்சோடிய கண்களாய்.....!

காரி உமிழ்ந்திடு
காம உணர்ச்சியை அடகுவைப்பாய் என
கடை போட்டு காத்திருக்கும்
கயவர்களின் முகத்தில்.....!

பாய்ந்திடு கடுங்சொல்லால்
பாசம் காட்டுவதாய்
பாசாங்கு காட்டி
பதுங்குக்குழியில்
பாய்போட துடிக்கும்
பகைவர்களின் முகத்தில்.....!

உள்ளத்தில் உறங்கிட்ட
உணர்ச்சிகளை உடைத்திடு
உனை உயிராய் நேசிக்கும்
உறவினை நாடி.....!

உன் நினைவில் நின்றவனின்
நிழற்படத்தை நித்தமும் நினைத்து......!
நிழலாய் தொடரும்
எதிர்கால வாழ்க்கை படத்திற்கு
சட்டம் போட்டு
கட்டம் கட்டாமல்
காரிருளில் வைத்துவிடாதே.....!

உன்னில் ஒரு பாதி
இழந்தால் என்ன
மறுபாதி வைத்து
மறு உலகம் காண்.....!

முண்டாசு கவி பாரதி
வெண்தாடி வேந்தர்
உதிர்த்த தத்துவத்தை படி.......!
உன் வெண்ணிற ஆடையில்
பூத்து குலுங்கும்
புது ரோஜாக்கள்.......!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (5-Feb-15, 8:40 pm)
பார்வை : 103

மேலே