​தொடரும் போர்

-எம்.எப்.எம்.றிகாஸ்

சரித்திரக்காலம் தொட்டு நாகரீகங்கள் பல தாண்டியும் மனிதனின் கோபமும் வக்கிரமும் இந்த பூமியை போர் என்ற போர்வையில் மனித இரத்த ஆறுகளால் நனைக்கத் தவறவில்லை. அத்தனை சாம்ராஜ்யங்களும் நாகரீகங்களும் இந்த பூமியில் மனித எலும்புகளில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பது காலச்சான்று. வெறிகொண்ட ஓநாய்களுக்கும் கீச்சிடும் கழுகுகளுக்கும் மனித மாமிசம் மனித இனத்தாலேயே வெட்டி வீசப்படுகிறது.

இன்று இதன்பின்ணியில் ஒரு நவீனபோர்க்களம். புழுதியும் புகையும் அடர்ந்த முட்புதர்க்காட்டின் மேற்பரப்பை மூடிக்கொண்டிருந்தது. முறிந்துபோய் காய்ந்து பூக்கமறுக்கும் எருக்கிலைச்செடிகளும் ஏவுகணைகளின் தாக்குதலில் தலை இழந்த பனைமரக்கட்டைகளும் கதறி அழும் ஓசை துப்பாக்கி தோட்டாக்களினதும் கைக்குண்டுகளினதும் சத்தத்திலும் மங்கலாக கேட்டுக்கொண்டே இருந்தது. ஏவுகணைகளின் வேகம் வானைப்பிளந்தது.

புதுமாத்தளனைக் கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப்போரின் உச்சத்தில் தொடர்ச்சியான மூன்றாவது நாளின் ஒருமாலைப்பொழுது. சூரியக்கதிர்களும் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது.

கசுன் விக்கிரமாராய்ச்சி இவன் இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பரிவின் அடிமட்ட போர் வீரன். இளமையின் துடிப்பும் திடமான உடல்கட்டும் கொண்ட ஆரோக்கியமான இளைஞன். ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டான். அதிதீவிர பயிற்சியின் பின்னர் அனுபவப்பற்றாக்குறையுடன் போர்க்களத்தில் களமிறக்கப்பட்டு இன்றுடன் அவனுக்கு நான்காவது மாதம்.
நிச்சயமாக இந்த நொடிகள் அவனது உலக வாழ்க்கையின் கடைசி நிமிடத்தினுடையதாக இருக்க வேண்டும். இந்த காட்டின் கள்ளிச்செடிகளுக்கிடையே அவனது உடல் இன்னும் சில நொடிகளில் சரிந்து விழப்போகிறது… ஆம் அவனுடைய நெஞ்சுப்பகுதியில் பாதுகாப்பு கவசத்தையும் காக்கி சட்டையையும் கிழித்துக்கொண்டு ஒரு தோட்டா அவனுடைய நுரையீரலை துளைத்துவிட்டிருந்தது. அவனால் வலி தாங்க முடியவில்லை. உடல் பின்புறமாக சரிந்து கொண்டே இருந்தது. புகை மூட்டத்தை தாண்டி நீல வானத்தின் தொலைதூர உச்சத்தில் ஒரு கழுகு சுற்றிக்கொண்டிருப்பது அவனுடைய பார்வைக்கு புலப்பட்டது. வலியின் அகோரம் அவனை வதைத்தது. வான் பிளக்க கதறினான் “அம்மா…”

விக்கிரமாராய்ச்சி இறந்த பின்னர் மஞ்சுளா கணவன் விட்டுச்சென்ற கடனெல்லாம் அடைக்க படாதபாடு பட்டாள். இத்தனைக்கும் அப்பன் கொடுத்த வாய்க்கால் ஓர நிலத்துண்டும் அதோடு சேர்ந்த கணவன் கட்டிக்கொடுத்த மூன்று அறை வீடும் கூடவே இரண்டு ஆண் பிள்ளைகளும்தான் அவளுக்கு இப்போது இருக்கின்ற சொத்துக்கள். மூத்தவன் சுபுன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். இளையவன் கசுன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான.; பார்க்கப்போனால் இவன் நான்காம் வகுப்பு படிக்கவேண்டும். ஆனால் இவனுக்கு படிப்பு என்றால் போதும் என்றாகிவிட்டது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவனுடைய மண்டைக்கு படிப்பு எட்டாக்கனியாகத்தான் இருந்தது.

மூத்தவனை நினைத்து மஞ்சுளா கவலைப்பட்டதே இல்லை, அவன் படிப்பில் கெட்டிக்காரன் போனவருடம் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்து அவனுக்கு உதவித்தொகையும் கிடைக்கிறது. அவ்வப்போது மஞ்சுளாவின் செலவுகளுக்கும் அந்த உதவித்தொகை பேருதவியாக இருந்து வந்தது. அவளுடைய கவலைகளும் பரிதாபமும் இளையவன் கசுன் மீதுதான், இருந்தாலும் போகப்போக திருந்திவிடுவான் என்று விட்டுவிட்டாள்.

“என்ட புள்ளயல் ரெண்டையும் நல்லா படிக்கவச்சா போதும், ஆம்புளபுள்ளயல் எப்படியும் பொழச்சிடுவானுகள் அதுக்கு பொறவு நான் நிம்மதியா இருக்கலாம்.” என்ற வார்த்தைகள்தான் “ஏன்டி இப்புடி க~;டப்படுற ஒரு கல்யாணத்தப்பண்ணினா வாறவன் பார்த்துக்க மாட்டானா? சொன்னா கேக்குறியா?” என்று நச்சரித்துக்கொண்டே இருக்கும் தனது தாய்க்கு அவள் பாடும் பல்லவிகள். “வாறவன் எப்புடி இருப்பானோ?... ரெண்டு உசுரும் எனக்கு போதும் இன்னொருத்தன கட்டிக்கிட்டு பாதி செத்த உடம்ப செத்து செத்து வாழ வைக்க என்னால ஏலா. இதுகல படிக்க வைச்சுப்பார்க்க அந்தமனுசன் எவ்வளவு ஆசப்பட்டாரு அத நான் நெறவேத்திவைக்கனும் அது போதும்.” வரன் கொண்டு வரும் அத்தனை பேருக்கும் வாய்ப்பாடமாய் உரைக்கம் மஞ்சுளாவின் வார்த்தைகள் இவை.

காலில் செருப்பு கூட இல்லாமல் கிராமம் முழுக்க கிறவல் வீதிகளில் நாள் பூராக உடுத்த பாவாடை சட்டையுடன் நட்டநடையாக அலைந்து திரிந்து அவள் பார்க்காத வேலைகள் இல்லை. அடுப்பங்கரை அப்பம் தொடங்கி காட்டில் கம்பு வெட்டுவது வரை தனது கொள்ளளவுகளையும் தாண்டி அவள் செய்யாத வேலை என்று ஒன்றும் இருக்கவில்லை. அவளுடைய ஒட்டுமொத்த கனவுகளையும் சுமந்த உடல் இரு பிள்ளைகளுடன் இந்த பூமியில் பிழைத்துக்கொண்டிருந்தது.

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் கனவுகள் கலையும் கொடிய தருணங்களை சந்தித்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்த கொடிய தருணத்தின் நிர்ப்பந்தம் மஞ்சுளாவையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நாள் வந்தது... மஞ்சுளாவின் அத்தனை கனவுகளையும் புரட்டிப்போட்டது. பள்ளிக்கூடத்துக்கு சென்ற மூத்த மகன் சுபுன் இன்னும் வரவில்லை. இளையவனுக்கு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் முடிந்து விட்டது. வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். நேரமும் மாலையாகிக் கொண்டிருந்து. மஞ்சுளாவின் மனதில் பதற்றம் புகுந்து கொண்டது.

“கசுன்... அண்ணண் எங்கடா?”

“தெரியாம்மா... அவனுக்கு முத எனக்கு ஸ்கூல் முடிஞ்சிடுமே...”

“விளையாடப்போயிருக்கானான்னு பார்த்து கூட்டிட்டு வா.” குரலில் கோபமும் கலந்திருந்தது.

“அண்ணண் விளையாடப் போவலம்மா... அங்க வரவே இல்லையாம்” அவளது உள்ளம் பதறியது... அவனைத்தேடி அலையத்தொடங்கினாள்.

“சுபுன்... சுபுன்...” குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

“என்னடி மஞ்சுளா மகன் எங்க போயிட்டான்?” பக்கத்து வீட்டு காஞ்சனாவின் குரல்.

“தெரியலக்கா... ஸ்கூலுக்கு போன புள்ள இன்னம் வரலக்கா” குரல் கம்மியது.

“எங்கயும் விளையாடப் போயிருப்பான் வந்துடுவான் பதறாத.”

“இல்லக்கா எப்பவும் ஸ்கூல் விட்ட உடனயே வந்துடுவான் இன்டைக்கு இன்னம் கானல.”

மாலையாகி இருளும் சூழத்தொடங்கியது. மஞ்சுளா ஊர் முழுக்கவும் தேடிப்பார்த்து விட்டாள். அழுகை ஒன்றைத்தவிர வேறு உதவி அவளுக்கு கிடைக்கவில்லை. பொத்திப்பாதுகாத்த பொக்கி~த்தை கை நழுவ விட அவளுக்கு உடன்பாடில்லை. இரவின் இருளும் கிராமம் முழுக்க கவ்விப்பிடித்துக்கொண்டது. மூலை முடுக்கு, சொந்த பந்தம் என்று அவள் அலைந்தும் சுபுன் இன்னும் அவளுக்கு அகப்படவில்லை.
இரவோடு இரவாக கசுனை கையில் இறுக்கப்பிடித்துக்கொண்டு விறுவிறுவென போலீஸ் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

“ஐயா... என்ட பையன கானல, ஸ்கூலுக்கு போனவன் இன்னும் வரல”

“ஸ்கூல்ல போய் பார்த்தியா?” காக்கி சட்டை போட்டிருந்த முரட்டு ஆசாமி அலட்சியமாகவே கேட்டான்.

“பார்க்காத இடமில்லைய்யா... என்ட புள்ளய கானல, நேரகாலத்தோட ஊட்டுக்கு வாறவன் இன்னம் கானல” அழத்தொடங்கிவிட்டாள்.

“சரி சரி பதறாத, நாங்க தேடிப்பார்க்கம், புள்ள ஊட்டுக்கு வந்தா சொல்லிடு இப்ப நீ ஊட்டுக்கு போ”

“ஐயா அது என்ட உசுரு தேடிக்கொடுங்க, புண்ணியம் கெடக்கும்” அவனை கடவுளாய் கும்பிட்டு வணங்கி புறப்பட்டாள்.

இரவு முழுக்க அலைந்தாள். காலையில் பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவளுடைய மூத்தமகன் சுபுனின் உடல் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆற்றங்கரையில் ஒதுங்கிக்கிடந்தது. ஊரே கூடி நின்று பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்த சுபுனின் உடலை (மன்னிக்கவேண்டும் மஞ்சுளாவின் உயிரை) ஓடி வந்து அள்ளி அணைத்து நெஞ்சில் ஒட்டிக்கொண்டாள் மஞ்சுளா. “எந்த பாவமும் அறியாத என்ட பச்சப்புள்ளய கொண்டுட்டாங்களே... என்ட மவனே...” கதறினாள். அவளுடைய கதறல் கூடியிருந்த காக்கை கூட்டங்களின் கண்களிலும் கண்ணீரை ஆறாய் பெருக்கெடுக்கவைத்தது. இரத்தம் அவளுடைய கண்களின் வழியாக வந்து கன்னத்தை நனைத்தது. எங்கிருந்தோ பறந்துவந்த பாறாங்கற்கள் அவளுடய நெஞ்சுக் குழியில் விழுந்து நொறுங்கும் சத்தம் தூர வானில் ஆலவட்டம் போட்டுக்கொண்டிருந்த பருந்துகளையும் கிறங்கவைத்தது. அப்படியே மயங்கி மரித்திருந்த தனது உயிரின் உடல்மேல் சாய்ந்தாள்.

யாரோ மனித வேங்கைகள் பச்சிளம் பாலகனின் உயிரை புதையல் எடுப்பதற்காய் நரபலி கொடுத்து இரத்த யாகம் செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசியிருக்கிறார்கள்.
இத்தனையும் நிகழ்ந்து இன்று பதினான்கு ஆண்டுகள் கடந்து விட்டது...

அந்த மனிதமற்ற ஆறறிவு படைத்த வெறிகொண்ட மனித மிருகங்கள் இன்னும் சட்டத்தின் புலன்களுக்கு புலப்படவில்லை.
மஞ்சுளா இன்றுவரை ஏதோ இடிவிழுந்த மரமாய் ஏனோ தனக்கு இன்னுமொரு உயிர் இருக்கிறது என்ற நிலையில் தனது உயிரை கையில் ஏந்திக்கொண்டிருந்தாள். இப்பொழுது அவளுடைய மொத்த கனவுகளும் எதிர்பார்ப்புகளும் அவளுடைய இளைய மகன் கசுன்தான். அவன் வளர்ந்து விட்டான் ஆனால் மஞ்சுளாவின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் அவனுக்கு புரிய வாய்ப்பில்லை.

அவனுக்கு இயலாத படிப்பில் கோட்டை விட்டு விட்டான். ஒன்பதாம் வகுப்பு வரைதான் மஞ்சுளாவால் அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடிந்தது. இதற்கிடையில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிய கூடாக்கூட்டாளிகளின் சகவாசம் வேறு. அவனைத் திட்டியும், திட்டமுடியாமலும் மஞ்சுளாவின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. எப்படியும் இவனுக்கு ஒரு வழியைக்காட்டிவிட்டு உயிரை விட்டு விட வேண்டும் என்ற ஏக்கம்தான் அவளை பல முறை தனியே இருட்டில் குந்தியிருந்து அழவைத்திருக்கிறது.

மஞ்சுளா ராலஹாமியைப் பிடித்து ஆரியதாச முதலாளியின் குவாறியில் சுப்பர்வைசர் வேலை வாங்கிக் கொடுத்தாள். நல்ல வேலைதான் ஆனாலும் கசுனால் இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை முதலாளியின் மகனோடு சண்டை பிடித்துவிட்டு வேலையை உதறித்தள்ளிவிட்டு வந்து நின்றான். மஞ்சுளாவுக்கு இது பல முறை பழகிப்புளித்துவிட்டது. ஆனாலும் அவளுக்கு அவன் மீது இருந்த பரிதாபமும் பாசமும் பெருகிக்கொண்டே போனது. அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் “தொலைந்து போ...” என்று ஒரு முறை திட்டிவிட்டாள். அதன் பின்னர் இரண்டு நாட்களாக அவன் வீட்டுக்கே வரவில்லை. பதறிப்போனாள். தேடி அலைந்தாள்... தனியே நான்கு சுவருக்கு நடுவில் குந்தியிருந்து புலம்பலும் அழுகையுமாய் அவளுடைய வாழ்வு பரிதவித்துக்கொண்டிருந்தது. ஒருவாறாக தேடிப்பிடித்து கெஞ்சி அவனை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள்.

“அம்மா... நான் ஆர்மில சேரப்போறன்” மஞ்சுளா சற்றும் எதிர்பார்க்காத அவனுடைய வார்த்தைகள் அவளுடைய மனதை வதைத்தன.

“என்னடா சொல்லுற... நீ எனக்கு புள்ளயா மட்டும் இரு அது போதும் எனக்கு, உசுர கொடுத்து நீ ஒலக்கனும் எண்டு சொல்லல... நீ ஒழுங்கா ஊர் வம்ப வளக்காம ஏதாவது ஒரு வேலைக்கு போனாத்தானடா உன்ட வாழ்கைக்கு உதவியா இருக்கும். உனக்கென்டு ஒரு வாழ்க்கைய சந்தோசமா அமச்சி கொடுக்கணும் எண்டுதானே இன்னும் அம்மா உசுரோட இருக்கன்” குரலில் ஏக்கம் தோய்ந்திருந்தது.

“இல்லம்மா.. நல்லாத்தான் கேக்குறன், எனக்கு இதுல நல்ல விருப்பமா இருக்கு. தடுக்காதம்மா”

“இல்ல வேணா... அந்த பொழப்பு உனக்கு வேணா. அந்த மனுசன் என்ன தனியா உங்களோட விட்டுட்டு போயிட்டாரு, உண்ட அண்ணன பாவிகள் சின்னப்புள்ள எண்டு கூட பார்க்காம கொண்டு போட்டானுகள், இப்ப நீயும் என்ன விட்டு போறத்துக்கு அனுமதி கேக்குற... என்னத்துக்குடா பாழாப்போன இந்த உசுரு எண்ட கையில இன்னும் தொங்கிகிட்டு இருக்குது? நானும் செத்துடுறன் நிம்மதியா எல்லாரும் போய்ச்சேருவம்.” அழத்தொடங்கிவிட்டாள்.

“இல்லம்மா எனக்கு ஒன்டும்மாவாது நான் பத்திறமா இருப்பன்” தொடர்ந்து அடம்பிடித்தான். கடைசிவரை மஞ்சுளா அவனுக்கு பிடிகொடுப்பதாய் இல்லை. கசுனும் அதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டான்.
இரண்டு நாட்களின் பின்னர் காலையில் எழுந்த மஞ்சுளாவுக்கு ஏமாற்றமும் கவலை முடிச்சுக்களும் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. கசுன் வீட்டில் இல்லை காலை பத்து மணி வரை தூங்குபவனின் கட்டில் காலியாக இருந்தது. அவளுடைய உடைந்து போன மனம் மேலும் நொறுங்குவதற்கு முடியாமல் கண்களில் நீர் வெளியேறியது. கடவுள் அவளுக்கு கொடுத்த வரங்கள் ஒவ்வொன்றாக தட்டிப்பறித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த வாழ்க்கையின் நொடிகள் அத்தனையும் அவளை திக்கற்ற நடைப்பிணமாய் அவளுடைய பார்வைகளை கேள்விக்குறியாக்கி காற்றில் பறக்கவிட்டிருந்தது. ஏன் பிறந்தேன்? யாருக்காக வாழ்கிறேன்? இத்தனை கொடுமைகளும் ஏன் எனக்கு மட்டும்?... அந்த நிமிடம் உலகின் அத்தனை ஜீவன்களும் சந்தோசத்தின் உச்சத்தில் இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. வீட்டில் விளக்கேற்ற மறந்த அவளுடைய நாட்கள் அவளைக்கண்ணீருடன் புலம்ப வைத்தது.

ஒரு வாரத்துக்கு பின்னர் பக்கத்து வீட்டு காஞ்சனாவின் வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
“மஞ்சுளா... உன்ட மகன் கசுன் உனக்கு கோல் எடுத்திருக்கான் சீக்கிரமா வா” காஞ்சனாவின் குரல் மஞ்சுளாவின் காதுகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பதறியடித்து ஓடினாள். தொலைபேசியை கையில் எடுத்து காதில் வைத்து அழுவதற்கு மட்டும் அவளுக்கு தெரிந்தது. கசுன் பேசினான் தான் இப்பொழுது தியத்தலாவை இராணுவப்பயிற்சி முகாமில் இருப்பதாகவும், அவனை மன்னித்துவிடுமாறும், அதிமாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் தான் இருப்பதாகவும் மட்டும் கூறிவிட்டு நிறுத்திவிட்டான். பெற்ற தாயின் மனம் சுக்குநூறாக நொறுங்கிய சத்தம் அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது கசுனின் தோட்டா துளைத்த நெஞ்சு வலிக்கிறது. “அம்மா...” என்ற கதறல் வார்த்தையில் இத்தனை வலிகள் நிறைந்த இந்த நினைவுகள் அவனை கலங்கவைத்திருந்தது. அவனுடைய உடல் மேலும் சரிந்து விழுந்து கொண்டிருந்தது. ஏவுகணைகள் அவனுடைய தலைக்கு மேலால் இடைவிடாமல் பீறிட்டு பறந்து கொண்டிருந்தது.

இப்போது அவனது நினைவுகள் அவனுடைய வாழ்க்கையின் மறுபுறமாக இருக்கின்ற அவனது உலகத்தில் அவனுக்கென்று இருந்த இன்னுமொரு உறவை நோக்கிச்சென்றது. அவனுக்கு அன்பை உணர்த்திய அவனது காதலி சந்தமாலியின் ஞாபகங்கள் அவனுடைய தோட்டா துளைத்த நெஞ்சில் மெதுவாக வளரத்தொடங்கியது.

அவனது இடது புறமாக வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று அவனுடைய காதல் நினைவுகளுக்காய் காத்திருக்கவில்லை, அதனது வேகம் அவனுடைய மனதின் வேகத்தை விஞ்சியிருந்தது. அந்த தோட்டா அவனது இடதுபக்க காதின் சற்று மேலாக தலைப்பகுதியை துளைத்துக்கொண்டு மறுபக்கமாய் வெளியேறியது. தலையில் இருந்து வழிந்த இரத்தத்துளிகள் நசுங்கி பால் வடித்துக்கொண்டிருந்த முட்கள்ளிகளின் உடலை நனைத்தன. இனி அவனுடைய மூச்சுக்காற்று நிறுத்தப்பட்டு விட்டது. கள்ளிகளுக்கு இடையில் வலிகளை சுமந்த கசுனின் உடல் தடுமாறி தலைகுப்புற விழுந்தது. வாழ்கையின் ரணங்களுடன் கனவுகளையும் ஏக்கங்களையும் சுமந்த உடல் ஒன்று இந்தப் போர்க்களத்தில் நான்கு வினாடிகளில் உலகை விட்டு நிறுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்துகொண்டிருந்தது போர்...
-முற்றும்.

எழுதியவர் : எம்.எப்.எம்.றிகாஸ் (7-Feb-15, 1:09 pm)
சேர்த்தது : றிகாஸ்
பார்வை : 175

மேலே