என் நெஞ்சு பொறுக்குதில்லையேமண் பயனுற வேண்டும்

பண்படா மக்களால் பாழ்படும் சமுதாயமே
என் நெஞ்சு பொறுக்குதில்லையே....
அம்மாவின் அரவணைப்பை தொலைத்து
ஆயாவின் மிரட்டலே தாலாட்டாய் கொண்ட
பிஞ்சு குழந்தைகளை காண்கையில்....

ஓடியாடி விளையாடும் பருவத்திலே
தேடிதேடி கூடுதல் வகுப்புக்கு திறமையை
கூட்டவென்று சுமக்கவொண்ணா புத்தகபையுடன்
செல்லும் மழலையரை காண்கையில்....

இருமனமொத்து வாழும் திருமணத்தின் பந்தம் புரியாமல்
விவாகரத்து நாடி வழக்காடு மன்றம் செல்லும்
அவசரகதியில் அறிவை தொலைத்த தம்பதியரை காண்கையில்...

அந்நிய மோகம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கபடும்
தாய்மொழி மறந்த பேரக்குழந்தையோடு உரையாடவே
முடியாமல் தவிக்கும் தாத்தா பாட்டிகளை காண்கையில்...

காமுக கொடூரனால் களவாடப்படும்
பால்மணம் மாறாத குழந்தைகளுக்கும் நேரும்
பாலியல் தொல்லைகளை காண்கையில்....

நாகரிக முன்னேற்றமென்ற முகமூடியில்
வீடுகளால் விளைநிலங்களுக்கு பாடைக் கட்டினோம்
இயற்கைவழி உணவிற்கு தாழ்ப்பாளிட்டோம்
மருந்தையே உணவாக்கி கொண்டோம்

தவறு எவருடையது ஆயினும்
தத்தளிப்பதென்னவோ நம் சமுதாயமே...நினைக்கையில்
என் நெஞ்சு பொறுக்குதில்லையே....

எழுதியவர் : ராஜி நம்பி (8-Feb-15, 12:00 pm)
பார்வை : 96

புதிய படைப்புகள்

மேலே