மகிழ்வில் ஆடும் உள்ளம்

கள்ளையுண்ட போதை நெஞ்சு காணுதே
கண்கள் சுழன்றோடி வட்டம்போடுதே
உள்ளுணர்வு மெல்ல எட்டிப் பார்க்குதே
உன்மத்தங் கொண்டோசை உள்ளம்போடுதே
வள்ளலென வாரியின்பம் நல்குதே
வட்டநிலா போலுமெண்ணம் மின்னவே
தெள்ளினிய செந்தமிழின் பாவிலே
தேகம் என்ன பூக்கள் உண்ட தேனீயே

வெள்ளரிக்காய்போலப் பற்கள் காணவே
வந்த புன்னகை வெடித்து மீறுதே
குள்ளன் போடும் குட்டிக் கரணம் போலவே
கூடிநிற்கும் நெஞ்சு குதித்தாடுதே
பள்ளிச்செல்வன் விட்டபோது பாதையில்
பம்பரம் நின்றாடும் வண்ணம் ஆடவே
வள்ளி பெற்ற சின்னவனும் ஓடிவா
வாணி, தேவி சுந்தரியும் கூடிவா

தள்ளிநிற்கும் தங்கநிலா வானிலே
தாவிஆடும் மேகக்கூட்டம் சேரவே
புள்ளி போட்ட சட்டைக்காரி தோகையும்
போடுமாட்டம் ஊதமகுடி நாகமும்
வெள்ளி நிலாகண்ட அல்லி நீரிலும்
வீசுங்காற்றில் துள்ளும் அலை போலவும்
நள்ளிரவில் கூத்தனோடு பேய்களும்
நாட்டியமிட்டாட நாமுமாடுவோம்

அள்ளி யின்பம் கொண்டதென்றும் ஆடுவோம்
ஆனந்தம் மென்மேலுமென்றே ஆடுவோம்
தங்கும் மனம்தங்கமே வெண்சங்கதே
தந்தனதோம் என்றுகண்டு ஆடுவோம்
வெள்ளமென்ற அன்புகொண்ட ஊற்றிலே
வீழ்ந்தவராய் நிர்மலங் கொண்டன்பிலே
முள்ளிலாத பூக்களென்றும் ஆடுவோம்
மூங்கிலாடும் சோலையாக ஆடுவோம்

எள்ளிநகை யாட இந்தபூமியே
எம்மதல்ல என்றபோதும் மாந்தரே
அள்ளிக்கொண்டு போக எண்ணி ஏங்கியே
ஆசைகொண்ட தெண்ணி நாமுமாடுவோம்
கொள்ளி வைக்க சாம்பலாகும் மேனியில்
கொண்ட ஆசைவன்மம் கொள்ளுமாவலும்
உள்ளதென்ன மீதிகாண என்றுமே
எங்கள் கைகள் கொட்டி நின்றே யாடுவோம்

துள்ளிச் சுற்றி யோடுவ திப்பூமியே
சொல்லவில்லை பூமி செல்லும்பாதையில்
நள்ளிரவோ முன்பகலோ நாமுமே
நாடிச் சுழன்றோடி நின்றுகாண்கிறோம்
வெள்ளம்வரும் பள்ளம், குதித்தாடிடும்
வீசிடும் தென் றல்மலர்கள் போக்கிடும்
அள்ளியெறிந்தே உறவில் அன்பெழ
ஆலயத்தின் தீபமாக வாழுவோம்

எழுதியவர் : கிரிகாசன் (8-Feb-15, 12:12 pm)
பார்வை : 51

மேலே