எதிர் முனை - கூர்மை

கரியும் அணுவும் தேகம் இழந்தே ..
வெந்து நொந்து சொட்டுச் சொட்டாய் ,
மின்சாரம் வடித்துக் கொண்டிருந்த வேளையில் ..!!

கரை வேட்டிகளின் கட்சி கூடுதலுக்காய் ..
கம்பிகள் போட்டே கதக் கச்சிதமாக ,
கடத்தப் பட்டுக் கொண்டிருந்தது மறுபுறம் ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செடி ஒன்று மலர் ஒன்றினை ..
ஈன்று எடுத்த பேரானந்த பேரின்பத்தில் ,
திளைத்துக் களித்துக் கொண்டிருந்த வேளையில் ..!!

சாலைகள் பெரியதாய் மாற்றும் திட்டத்திற்காய் ..
அரம் கொண்டே அறுபட்டுக் கொண்டிருந்தது ,
ஆயிரம் காலத்து ஆலமரம் ஒன்று ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கண்ணகி சிலை ஒன்றினை வடிக்க ..
சிற்பி கல்லை சிறுகச் செதுக்கி ,
மெருகேற்றிக் கொண்டிருந்த அதே வேளையில் ..!!

தனிமையில் காம முதலைகளின் பிடியில் ..
சிக்கிக் கொண்ட பெண் ஒருத்தியின் ,
சீலை வேகமாய் உருவப்பட்டுக் கொண்டிருந்தது ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தாயின் கருப்பையை கிழித்துக் கொண்டு ..
குழந்தை ஒன்று ஆனந்தமாய் வெளியேற ,
உந்திக் கொண்டிருந்த அதே வேளையில் ..!!

அரை சவரன் தங்க காதணிக்காய் ..
மூதாட்டி ஒருவரின் கழுத்து கத்தியால் ,
இரத்தம் சிந்த அறுபட்டுக் கொண்டிருந்தது ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயரும் தவறுகளின் எண்ணிக்கையை குறைக்க ..
அவசர அவசரமாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு .
சட்டம் இயற்றிக் கொண்டிருந்த வேளையில் ..!!

சட்டத்தின் பைகளை நிரப்பி தப்பிக்க ..
காகிதங்கள் அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது ,
பணம் என்று பெயர் சூட்டப்பட்டே ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாமல் ..
ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டே ,
வீதி வீதியாய் சென்றிருந்த வேளையில் ..!!

மதங்களின் அடிப்படையை முற்றிலும் மறந்தே ..
பிரச்சார துண்டுகளை பரப்பிக் கொண்டிருந்தது ,
மதம்மாற்ற மதப்பிச்சை கூட்டம் ஒன்று ..!!

-- நீளும் ..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-- கற்குவேல் .பா --

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-Feb-15, 1:38 pm)
பார்வை : 83

மேலே