நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

மூன்று வயதில் முதிரவில்லை முத்துவிரல்கள்
முப்பது பக்கம் எழுத வேண்டும் மூன்று மொழிகள் !
முதல் வகுப்பில் பெற்றவன் துப்பிய துண்டு பீடி
மூன்றாம் வகுப்பில் மூலைக்கடையில் முழுபீடி !

அழிவென்று தெரிந்தும் அரசே ஏற்றுநடத்தும் அவலநிலை
மாமன் மச்சான்னு ஆரம்பித்து
மயிர் பிடியில் முடித்துவிடும் மதுக்கடைகள்!

கற்பின் எல்லை வெறும் கருவறைச் சுவராய் உள்ளவரை
பிள்ளையை சுமக்கும் வயிறு - சமூகத்தின்
பிழையை சுமக்கும் இழிவுநிலை!

பதுக்குபவனும் பரிப்பவனும் என்றும் பணக்காரனாய் - பாவம்
உழைப்பவன் மட்டும் ஓட்டைக் குடிசையில் ஓதும்நிலை!

சாக்கடை நீரும் சாயக்கழிவும்
சந்தனமாய் ஆற்றை அலங்கரிக்க
பயிர்கள் நீரின்றி வாடும்
உயிர்கள் உணவின்றி சாகும்

செயற்கைக்கோளை செவ்வாய்க்கு விட்டோம்
உரத்தைக் கூட்டி மரத்தை வீழ்த்திவிட்டோம்
வென்றுவிட்டோம் என்று நாமே நம்மை கொன்றுவிட்டோம்!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (8-Feb-15, 4:53 pm)
சேர்த்தது : ஷர்மிளா
பார்வை : 58

மேலே