கனவில் நான் வாழ்ந்த காதல்

ஒருநாளின் ஒருமணிநேரப்பொழுதினை ஒரு யுகமாக தோன்றச்செய்த சுகமான நினைவு...தினம் தினம் நினைத்து திழைத்து களைத்துபோகும் ஆனந்த அவஸ்தை அவள் நினைவுகள் கண்ணுள்ளே தோன்றி அடித்துவீழ்த்துகின்றது என்மனதை ஒரு அடிகூட எட்டி வைக்க முடியாமல்...வாழ்ந்துகொண்டே சாகவைக்கும் கொடிய நோய்களின் இராச்சியமாக பழக்கப்பட்டு போய்விட்ட இந்த பூமியில் சாகடித்தே வாழவைக்கும் இன்பத்தாண்டவம்...சாகடிக்கப்படும் உயிரிலும் சதாவேளையும் புன்னகையை கொடுக்கும் சுகத்தின் அகமான உறவு...குறுகிய நேரத்தில் என்னை குலைத்து குற்றுயிராக்கி மயக்கி மண்டியிடவைத்து, இதயத்தில் இதமான இன்னிசையுடனேயே சுற்றித்திரிய வைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை, கனவே நினைவாகும் என்று நிஜ‌த்திலும் நம்பமுடியவில்லை...!

அவள்
முகமறியேன், முன்புருவ வளைவறியேன், விழியசைவறியேன், கருவிழியின் திருநடனமறியேன், இதழறியேன், இதழோர இன்னகையறியேன், முல்லையொத்த பல்வரிசையறியேன், புன்னகையில் கன்னத்தின் குழியறியேன், உருவறியேன், அவள் உள்ளமறியேன், மருகிநிற்கும் அவள் வெட்கமறியேன், விழிபார்க்கா அவள் வனப்பறியேன், தேனொத்த அவள் குரலறியேன், மானொத்த அவள் நடையறியேன், வானொத்த அவள் மனமறியேன், நானும் தோற்கிறேன் அவள் அருவத்தில்...உருவம் பார்க்க உள்ளத்தில் ஆர்வம்தான், உடலசைவில் மறைந்துபோகுமோ என்ற பயம் உருவாகியதோ உள்மனதில் இந்த நொடிவரை அவள் உருவத்தின் பதிவில்லை என் அகத்தில்...

ஆரம்பித்த இடம் ஞாபகமில்லை ஆனால் முடிந்த இடம் மூன்று தலைமுறைக்கும் மாறாத நினைவாக மூளையில், ஆங்கிலப்பட கருத்துக்கு ஆதாரம் ஆகிவிட்டேனே...கனவின் இடையிலேயே கனவென்ற உண்மை தெரியுமாம்...ஆனால் கனவுகலைந்து காததூரம் போய் நனவில் நாட்கள் ஓடியபின்னும் கனவென்ற உண்மை மனதுக்கு புரியவில்லையே...ஆரம்பம் தெரிந்தால் அடையாளமாவது கண்டுகொள்வேனே, முடிவு மட்டும் அறிந்து முழுநேர வலியாகிவிட்டதே...

கடற்கரையில் கைகோர்த்து நடந்து வருகின்றோம், பூவின் மென்மை என்கையில் புலப்படுவதில் உணர்ந்தேனோ என்னவோ, கனவில் அவள் இணைந்த இடம் அதுதான். வெள்ளைவெளேரென்று மணல் வெயிலில் வைரமாய் மின்னுகின்றது, என்றும் பார்க்கும் கடற்கரைதான் இன்று அவள் இணைவில் அழகாகிறது அதன் தோற்றமும். காலடி பதித்து நடந்து கடற்கரையில் குழந்தைகளாக கட்டிய மணல்வீட்டை அடித்த அலையின் வடிவில் சுனாமியின் எண்ணம், அவள் நடந்த தடங்களை அழகுபார்த்ததோ என்னவோ அருகில் வராமலே தள்ளினின்று ரசித்தன‌ அன்னையின் அலைக்கரங்கள், தலைகோதி அவள் சிரித்த அழகில் தலைகுனிந்தது தள்ளிநின்ற அன்னம், அவள் அணைப்பில் இருந்த அந்த நிமிடங்கள் இதுவரை சொல்லிடாத தமிழ்சினிமாவின் காதல் சுகங்கள், காற்றில் கலைந்த முடியை கைகளால் வலைத்த அழகுடனேயே என்மனம் அவள்வீடுவரை சென்றது.

உடைந்துபோகும் தருணங்களில் உறவோடு உரிமையோடு உணர்வோடு அணைப்போடு அன்போடு ஒரு ஆறுதல், மிதந்து போகும் தருணங்களில் மகிழ்வோடு மனதோடு ஒரு செல்லப்பகிர்வு, இரவுநேரம் இடைவிடாத தொலைபேசி பேச்சில்லை இடம்நேரம் பார்க்காமல் சந்திப்பில்லை. காணும் இடங்களில் கண்ணொடு ஒரு கதை, கடந்துவிட்ட அன்பின் முடிவில் கடலோர கண்ணியமான சந்திப்பொன்று கண்ணால் பேசிய கதைகளுக்கு கருத்துரை எழுத, புரிந்துணர்வில் மலர்ந்து வாடாது மணம்வீசிக்கொண்டே மனதை கொள்ளை கொணடது. அடுத்தவருக்கு தெரியாது இருவரின் காதல் ஆனால் காதலுக்கே தெரியும் இருவரின் அன்பும்.
உலகுக்காக வாழவில்லை உள்ளத்திற்காக வாழ்ந்தது இரு உயிரும், பதற்றமில்லை பயமில்லை கலக்கமில்லை கவலையில்லை, இரு உடலுக்கும் ஒரு உயிர்தான் ஒரே உயிரில் பாகுபாடு இருக்க முடியாதே... உலகத்தில் அன்புக்கு முடிவில்லை நம் இதயத்திலும் தான், நிறைந்துகொண்டது ஒருவர்மேல் ஒருவருக்காக...

அன்புக்கு ஓர் அவசரமெனில் அதனை அகமுணர்வது ஒன்றும் ஆச்சரியமில்லையே அன்று நடந்தது அதுதான்...அவள் ஏறியது அனுதினம் செல்லும் அதே பேரூந்துதான் அதிசயமில்லை என்றும் போல் அன்று அதிக கூட்டமில்லை, அவளை வழியனுப்ப அவளுடனேயே நிலையத்தில் தனிமையில் அவள் பயத்தை தவிர்ப்பதற்கு...

செல்ல சண்டைகள், சின்ன ஊடல்கள், குறும்பு பேச்சுகள் என்றும் போல் அல்ல அன்று கொஞ்சம் அதிகமாக...காத்திருக்கும் நேரமும் சற்றே நீண்டதாக அன்று மட்டும் சொல்லியிருந்தாள் அதனை... அவளுடன் இருக்கும் ஒருநொடியே என்னை ஓராயிரம் ஆண்டு வாழவைக்கும் அன்றுவாழ்ந்த அந்த எண்ணற்ற நொடிகள்தான் நினைவுகளாகும் என்று தெரிந்திருந்தால் அவை நிலையாக வாழ்ந்திருப்போமே...அவசரமாக வந்த பேரூந்தில் அவளுடனேறி மறுவாயிலில் இறங்கும்போது அவள்சொன்ன காதல் வார்த்தைகள்தான் நம்காதலை வாழவைக்கும் கடைவார்த்தைகள் என்பது புரியவில்லை எனக்கு...இறங்கி நடந்தேன் இதழோர சிரிப்பில் என்னையே மறந்து அவளுக்கு அழைத்து அவளுக்கே விவரிக்க அலைபேசியை எடுத்தேன் அதன் ஆற்றலெல்லை செயலிழந்திருந்தது அநியாயமாக அவசரமாக கைகளால் அவள் இலக்கத்தை அழுத்துகின்றேன் தலையணயருகிலிருந்த அதனிலிருந்து ஒளி என் கண்களை நிறைக்கின்றது கனவிற்கு கடைப்புள்ளி வைத்ததுபோலே...

நினைக்கும் கணமெல்லால் நெஞ்சத்தில் நெகிழ்க்கும் ஒரு நெருடல் கனவிலே நான் வாழ்ந்த காதலில்...!

எழுதியவர் : நிது (11-Feb-15, 12:11 am)
சேர்த்தது : நிதர்சன்
பார்வை : 76

மேலே