“அழகு உண்மை என்றால்”

அறைந்திடப் பட்டது ஆகும்
அடங்கிடும் தாழியின் புகழும்
சிறந்திடும் ஆங்கிலம் தன்னில்
கவிதையில் செய்தி என்று இங்கு
உறைந்திடும் புலவோர் மாட்டு
தெளிவினை தெளிந்து ஊற்ற
பிறந்தநல் பிறவியின் பயனை
பெற்றனன் என்றே சொல்வேன்.

அரம்பை அடி அரம்பையாய்
சொல்லிடும் பொருளில் அல்ல
குரும்பை வெம் முலையைப் போல
குறுகிடும் தாழியின் தோற்றம்
நிரம்பிய அழகு என்றால் முழு
அழகு அது உண்மைதானே
சிரம் அதைக் குடையும் கேள்வி
சிந்திக்க வைத்தது என்னை.

சொல்புத்தி என்று இருப்பின்
சுயபுத்தி என்றும் இருக்கும்
கல்லிலே எழுத்தென நிற்கும்
உண்மையில் அழகு சொலிக்கும்
நல்லழகது உண்மை ஆயின்
அறிவினை ஊட்டும் அழகு
கல்லெனக் கரைந்து வீழும்
கவின்மிகு அழகும் அதுவே.!

“கேட்ட இராகங்கள் இனியவை
கேளாதன அதனினும் இனியனவென
வேற்று அடியினில் சொன்னது
வேரான அழகதன் உண்மையாம்
அழகெதும் உண்மை என்றால்
உண்மையும் அழகுதானே
அந்தமே ஆதி ஆயின்
ஆதியும் அந்தம் அன்றோ?

எழுதியவர் : தா, ஜோசப் ஜூலியஸ். (12-Feb-15, 5:18 pm)
பார்வை : 171

மேலே