அதுதான் இப்படைப்பு

கரும்பின் சுவைபோலவும் இனிக்கும்
நிலவேம்பின் வேராகவும் கசக்கும் ​
அதுதான் வாழ்க்கை !

வாழும்வரை பயணித்து இனிக்கும்
இடையிலும் வெட்டுண்டு கசக்கும்
அதுதான் நட்பு !

​இதயங்கள் இனைந்தும் இனிக்கும்
உள்ளங்கள் உடைந்தும் கசக்கும் ​
அதுதான் காதல் !

நெஞ்சங்கள் ஒன்றினால் இனிக்கும்
புரிதலும் குன்றினால் கசக்கும்
இதுதான் திருமணம் !

பொருளும் புரிந்தால் இனிக்கும்
நேரம்கழிக்க படித்தால் கசக்கும்
அதுதான் கவிதை !

செல்வமும் குவிந்தால் இனிக்கும்
சேர்த்ததும் கரைந்தால் கசக்கும்
அதுதான் ( இன்றைய ) அரசியல் !

இலாபமே ஈட்டினால் இனிக்கும்
நட்டமே தொடர்ந்தால் கசக்கும்
அதுதான் வியாபாரம் !

நகைச்சுவையாக பேசினால் இனிக்கும்
அர்த்தமில்லாமல் பேசினால் கசக்கும்
அதுதான் பட்டிமன்றம் !

அடுக்குமொழி கவிதையெனில் இனிக்கும்
தடுமாற்றமுடன் கவிவாசித்தால் கசக்கும்
அதுதான் கவியரங்கம் !

எதிர்கட்சியை நிந்தனைசெய்தால் இனிக்கும்
உலகளாவிய அரசியல் பேசினால் கசக்கும்
அதுதான் அரசியல் மேடை !

கலகலப்பு காட்சிகளால் இனிக்கும்
கருவுள்ள கதையானால் கசக்கும்
அதுதான் திரைப்படம் ( இன்று ) !

அன்பளிப்பும் ஆயுதங்களும் இனிக்கும்
நேர்மையான முறையெனில் கசக்கும்
அதுதான் தேர்தல் களம் !

பதவியும் பணமும் மட்டுமே இனிக்கும்
உதவிடு உலகோர்க்கு எனில் கசக்கும்
அவர்தான் அரசியல்வாதி !

விரும்பும்வரை வாழ்வதெனில் இனிக்கும்
விரும்பாமல் வாழ்வதெனில் கசக்கும்
அதுதான் ஆயுட்காலம் !

முதுமை இல்லையெனில் இனிக்கும்
விரைவில் தளர்ந்திட்டால் கசக்கும்
அதுதான் வயது !

இதோடு நிறுத்தினால் இனிக்கும்
மேலும் நான் நீடித்தால் கசக்கும்
அதுதான் இப்படைப்பு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Feb-15, 7:04 pm)
பார்வை : 128

மேலே