வரலாற்று யாத்திரைகள் - 9 ஒரு பக்கக் கதைகள்

குயிலி மெல்லக் கண்விழித்தாள் .அருகில் வைத்தியர் இருந்தார் . “நான் எங்கிருக்கிறேன் ....? என்னவாயிற்று எனக்கு ?”

“இரண்டு வாரங்களாய் நீ அரசியாரின் படுக்கையறையில் தான் இருக்கிறாய் . பச்சிலை மருந்துகளால் தீக்காயம் கூட ஆறிவிட்டது . “

குயிலி கண்விழித்த செய்தியறிந்த வேலுநாச்சியார் வேகமாக வந்து குயிலியை அணைத்துக் கொண்டாள் . எழுந்திருக்க முயற்சித்த குயிலி அப்போதுதான் தனக்கு ஒரு கால் இல்லாதது கண்டாள் . ஒரு கணம் நடந்ததை சிந்தித்துப் பார்த்தாள் .

“அம்மா ! போரில் என்னவாயிற்றம்மா ... வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் எடுத்த முயற்சியில் தோற்றுவிட்டேனா அம்மா ?” கண்ணீர் வழிந்தோடியது குயிலியின் விழிகளில் .

“கவலைப்படாதே குயிலி ! வெற்றி நம்வசமே ! அன்று சிவகங்கை இராஜராஜேஸ்வரி கோயிலில் சாமி கும்பிடுவதுபோல் சென்ற நாம் வீராவேசமாய் வாள்சுழற்றிப் போரிட்டோமல்லவா ? ஆங்கிலப் படைகளின் ஆயுதங்களுக்கு முன் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை கணித்த நீ ...எடுக்கத் துணிந்த முடிவை உன் பார்வையாலும் செய்கையாலும் நான் புரிந்து கொண்டேன் .

அன்று விஜயதசமி ஆதலால் படைவீரர்கள் தங்கள் ஆயுதங்களை பூஜைக்காக ஆயுதக் கிடங்கில் குமித்து வைத்திருந்தனர் . வெற்றி நழுவி விடுமோ என்ற எண்ணத்தில் உன்னுடலில் எரிநெய்யை ஊற்றி அரண்மனை ஆயுதக் கிடங்கில் குதிக்கத் துணிந்ததை உணர்ந்தேன் . என் ஆணைப்படி நம் உடையாள் படைப்பெண்கள் மின்னலெனப் பாய்ந்து வந்து நீ தீப்பந்தத்தால் நெருப்புவைத்த அதே நொடி உன் உடையை வாளால் கிழித்து அப்படியே ஆயுதக் கிடங்கில் வீசிவிட்டு உன்னையும் மறுபக்கம் தள்ளி விட்டனர்.நெய் வழுக்கியதால் மேலிருந்து நீ கீழே விழுந்ததில் ஒரு காலை இழக்க வேண்டியதாயிற்று .

உன்மேலும் தீக்காயம் . ஆனால் நீ திட்டமிட்டபடி ஆயுதக்கிடங்கு வெடித்து தீப்பிடித்தது. நிராயுதபாணியான படைவீரர்கள் தலை தெறிக்க ஓட்டமெடுத்தனர் .ஆங்கிலத்தளபதி பாஞ்சோர் என்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடி புதுக்கோட்டைக்கு தப்பியோடினான் . சிவகங்கை மண்ணை மீட்டுவிட்டோம் வீர மங்கையே ! “
வேலுநாச்சியார் குயிலியை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் .

தாழ்ந்த குலப் பெண்ணான தன்மேல் அன்பைப்பொழிந்த ராணியிடம் “ அம்மா ! என்னயிது .... என்னை உங்கள் படுக்கையில் போட்டு வைத்தியம் பார்க்கிறீர்களே ...??” அழுதாள் .

“ குயிலி ! என் உயிருக்கு ஆபத்து வந்த போதெல்லாம் துணிந்து நின்று தடுத்தவள் நீ ....! நயவஞ்சக சிலம்பு வாத்தியாரை என்னுயிர் காக்க குத்திக்கொன்றவளாயிற்றே ....! கவலைப் படாதே ....கால் போனால் என்ன? உனக்கு ஊன்றுகோலாய் நானிருப்பேன் ! “
வேலு நாச்சியார் அன்பில் கரைந்தாள் வீரவேங்கை குயிலி .



உண்மையில் நடந்தது என்னவென்றால் ........

போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Feb-15, 8:20 pm)
பார்வை : 230

மேலே