வெள்ளைமனம்

கடலன்னை கரையினிலே
கவிபாடும் குயில்களென
வீணையவள் உறவுகளாய்
விளையாடும் சிறுபிள்ளை..!

வண்ணகூடை கையிலேந்தி
வாரித்தரும் அன்னையிடம்
அள்ளியள்ளி சேர்க்குதம்மா
ஆசையெனும் சிப்பிகளை..!

வெள்ளியலை தேடிவரும்
வெள்ளைமன பிஞ்சுகளை
கொஞ்சிவரும் தென்றல்கூட
குழையும்படி உரசுதம்மா..!

கள்ளமில்லா உள்ளங்களின்
கலையழகை காண்பதற்கு
கவலையெலாம் சிறகடிக்க
காணாதேசம் போகுதடி...!

அழகுடன் அழகுசேர்க்க
ஆசையுடன் கைகளேந்தும்
பச்சிளம் குழந்தைகளின்
பாத்திரங்கள் நிறையுதடி..!

கால்கொண்டு நடக்கின்ற
கரையோரம் மணல்கூட
மழலைகள் பாதமதில்
மல்லிகையாய் மணக்குதடி...!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (16-Feb-15, 6:14 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 66

மேலே