​படமே படிந்தது பாடமாய் ​

இல்லாத ஒருவரின் படைப்பு என்பார்
இயற்கை அளித்ததே பிறப்பு ​என்பார்
இதயங்கள் மாறுபடும் உலகில் என்றும்
இடையிலே எதற்கு ஆராய்ச்சி எனக்கும் !

பகுத்தறிவே என்பாதை இன்றும் என்றும்
வகுத்தே அறியட்டும் வாழ்வை எவரும் !
தொகுத்து வழங்கிடும் தொடரில்லை இது
உள்ளத்தில் பெருகிடும் உணர்வலை இது !

படத்தைக் கண்டதும் படிந்தது பாடமாய்
படர்ந்ததை பகிரவே வடித்தேன் வரிகளாய் !
பறவை ஒன்றிங்கே தட்டிக் கொடுக்கறது
பாசத்தின் உணர்விலா ஓரினம் என்பதாலா !

குருவியின் நெகிழ்வால் குளிர்ந்தே போனேன்
குற்றால அருவியில் குளியலாய் மகிழ்ந்தேன் !
குன்றி மணியளவும் மனிதனுக்கு உண்டாஎன
குறையுள்ள நம்இனத்தை நினைத்தேன் நானும் !

அன்பின் ஆழத்தை பறவைகளிடம் கண்டேன்
உணர்வின் உச்சத்தால் உள்ளம் சிலிர்த்தேன் !
ஐந்தறிவு உயிரிடம் கடலளவோ கருணை
ஆறறிவு மனிதரிடம் கையளவே மனிதம் !

கற்கால மனிதனுக்கோ மனம் இருந்தது
இக்கால மனங்களோ கல்லாகிப் போனது !
இறுகிட்ட இதயங்களை உருகிட செய்வீர்
இறுதிவரை வாழ்வீர் ஈரமுள்ள இதயமாய் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Feb-15, 9:57 pm)
பார்வை : 126

மேலே