மூக்குவாளி குமார் == குமரேசன் கிருஷ்ணன் ==

பதினைந்தாம்நாள் மூத்தவளும்
முப்பதாவதுநாள் இளையவளும்
பிறந்தபின் அடுத்தடுத்து
இறந்துவிட்டார்களாம்...

இரண்டுபேரைக் கொன்றுவிட்டு
மூன்றாவது பிறந்தேனென்று
ஏகநிந்தனையெனக்கு ...

ஆண்வாரிசென்றாலும்
சீண்டயாருமில்லை
செவிலித்தாய்தான்
சேர்த்தணைப்பாளாம்...

முப்பதை நான்தாண்ட ...
முப்பொழுதும் வேண்டுதல்தான்
எனைக்கண்டு அழும் அம்மாவுக்கு

அய்யனாருக்கு வேண்டுதலிட்டு
காது மூக்கு குத்தடா
காத்துக் கருப்பு அண்டாதுவென்ற
எவன் சொல்லோ பலித்தது ...

காதோடு ..
மூக்கும் குத்தியாயிற்று
மூக்குவாளி குமாரென்று
அடைமொழியும் ஒட்டிக்கொண்டது
என் பெயரோடு ...

பட்டப்பெயர் சொல்லியே
பலநாள் கழியும் பள்ளிகளில்
மூக்குப் புடைக்க ...
முகம்சிவக்க கோபமெழும்
பின்னர் பழகிவிட்டது

பிரிதொருநாள் எட்டாவதில்
மூக்குவாளி மூக்கோடு இறுக்க
கழற்ற வேண்டியதாயிற்று...
அம்மாவுக்கு மனசேயில்லை
அய்யனாருக்கு நேந்ததென்று

அலுவலகத்தில் தற்போது
"அய்யா ...சார்" ரென்ற
அடைமொழிகள்
அரங்கேறி வெகுநாளாயிற்று

ஆனாலும் ..
நிதமும் நிலைக்கண்ணாடியில்
நிசமுகம் காணும்போதெல்லாம்
நினைவுபடுத்தும் வலது மூக்கின் சிறுகுழி
மறந்துபோன அந்த மூக்குவாளி குமாரை ..?
---------------------------------------------------------------------------
== குமரேசன் கிருஷ்ணன் ==

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (21-Feb-15, 6:44 am)
பார்வை : 233

மேலே