திருமணம்

குல தெய்வத்திற்கு ஈடாகப் பெண்ணா?
சூலாயுதம் ஏந்தி பயமுறுத்தி
தவறு செய்தால் மன்னிக்காத
பத்ரகாளி தான் பிடிக்குமா ஆண்களுக்கு?

தெய்வப்பெண்ணோடு குடும்பம் நடத்தமுடியுமா?
சிலை வைத்து வேண்டுமானால் கும்பிடலாம்...
சில்லறை சில்மிஷங்கள் பண்ண முடியுமா?
சாமி வந்து ஆட வேண்டியது தான்...

மனைவி ஒரு அப்பாவி
சேர்ந்து விட்டால் தன்
விருப்பு வெறுப்புகளையும்
கழற்றி வைப்பாள்...

உடலால் மனத்தால் மொழியால்
பெருமை சேர்ப்பாள்
ஆனாலும் குறை நிறை இல்லாத
மனிதன் யார்?

குறைகளோடு சேர்த்து ஒத்துக் கொள்ளும்
மனப் பக்குவம் யாரிடம் இருக்கிறது?
மனதின் ஆசைகள் வக்கிரங்கள்
ஒரு பெண்ணால் தீர்க்க முடியாதது...

பாவம், பிறந்த வீட்டிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்
புகுந்த வீட்டிலும் உரிமை கொண்டாட முடியாது
அடுத்தவர்களுக்குப் பிடித்தது போல் நடந்து
தன் வாழ்க்கையை வாழத் தெரியாத ஜீவன் பெண்...

பொறுமையின் சிகரமாய் பிள்ளை வளர்த்தாலும்
பெட்டகமாய் புருஷனைப் பார்த்துக் கொண்டாலும்
உடல் நலம் குன்றினால் தெரியும் பெண்ணிற்கு
தன் அம்மாவின் பரிவும் பாசமும்...

இதுவும் நல்லதற்குத் தான்...
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல
என்று புரிந்து கொள்ள நல் அரிய வாய்ப்பு
பெண்ணின் திருமண வாழ்க்கை...




எழுதியவர் : shruthi (24-Apr-11, 12:24 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : thirumanam
பார்வை : 476

மேலே