பாசுரம் சொல்லும் கதை---
"தாத்தா, ரொம்ப நாளா கதை சொல்லவேயில்லை?"
"ஆமா கண்ணா, கொஞ்சம் பிசி, அதனால் தான் கதை சொல்ல முடியல. மன்னிச்சுக்க."
"அது சரி தாத்தா, இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறே?"
"நாலாயிரப் பிரபந்தம்ங்கறது, அள்ள அள்ளக் குறையாத அமிர்தகலசம். அதில இல்லாத கதையா? ஒவ்வொரு பாசுரமும் ஒன்று அல்லது அதுக்கும் மேல கதையைக் கொண்டுள்ளது கண்ணா.
ஆழ்வார்கள் உண்ர்ந்து, அனுபவித்துப் பாடியுள்ளார்கள்."
"இப்ப நாம பாக்கப் போற பாசுரத்தில பல கதைகள் ஒளிந்து இருக்கு, கண்ணா."
"அப்படியா தாத்தா, அப்படி எத்தனை கதைகள் இருக்கு தாத்தா?"
"ஐந்து கதைகள் இருக்கு கண்ணா, இதுல."
"எப்படி தாத்தா ஐந்து கதைகளை ஒரே பாசுரத்தில் பாடி இருக்கா?"
"அதோட மட்டும் இல்ல, பல அவதாரத்தில் நடந்த விஷயங்களை இதுல சர்வ சாதாரணமாக சொல்லி இருக்கார் ஆண்டாள்.”
"அப்படி என்னன்ன அவதாரங்கள் தாத்தா?”
"வாமன அவதாரம், கிருஷண அவதாரம், மற்றும் ராமாவதாரம் ஆகிய அவதாரங்களைப் பற்றி இங்கு சொல்லி இருக்கார் கண்ணா.”
"வாமன அவதாரம், ன்னா என்ன தாத்தா?”
"குள்ளமான அவதாரம் தான் வாமன அவதாரம் இந்த அவதாரம் அவதார வரிசையில ஐந்தாவது அவதாரம் கண்ணா.”
"எதுக்கு பெருமாள் அவதாரம் எடுக்கிறார் தாத்தா?”
"எப்பல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் அதிகம் ஆகிறதோ, அப்பல்லாம் பெருமாள் அவதாரம் எடுக்கிறார் கண்ணா.”
"இங்க அப்படி என்ன தாத்தா நடக்குது?”
”கதையைச் சொல்றேன் கேளு.”
"பலிச் சக்கரவர்த்தி ஒரு அரசன். அவன், நான் முன்னாலேயே உனக்கு பிரஹலாதன்- ன்னு ஒருத்தரப் பத்தி சொல்லியிருக்கேனே, ஞாபகம் இருக்கா?”
"ஆமாம் தாத்தா, அவன் அப்பா ஹிரண்யகசிபு என்கிற அசுரனைக் கொல்ல, பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தார்,ன்னு சொல்லி இருக்கியே!”
"ஆமாம் கண்ணா, சரியாச் சொன்ன.அவரோட பேரன் தான் நான் முன்னால சொன்ன பலிச்சக்கரவர்த்தி.”
"அந்தப் பலிச் சக்கரவர்த்தி அசுர வம்சத்தில் வந்தவன். அவன் இந்திரனை வெற்றி பெற்று இந்திரலோகத்தை கைப்பற்றி ஆட்சி நடத்துகிறான்.”
”இந்திரன் அங்கிருந்து ஒடி ஒளிந்துகொண்டான்.
இதற்கிடையில் இந்திரன் தாயாரும் தந்தையுமான அதிதி மற்றும் கஸ்யபர் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.
கஸ்யபர் அதிதியிடம், வருத்தப் படாதே அதிதி, உன் வருத்தம் தொலைந்து இந்திரன் மீண்டும் பதவி அடைய வேண்டுமானால் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி விரதம் இரு. நிச்சயம் இந்திரன் மீண்டும் பதவியைப் பெறுவான் என்று உறுதி கூறுகிறார்.
அதே போலவே அதிதியும் ஸ்ரீநாராயணனை நோக்கி கடுமையான விரதம் இருக்கிறாள். கடுமையான விரதத்தைப் பார்த்த ஸ்ரீமன் நாராயணனும், அதிதியின் முன் தோன்றி, "உன் கடுமையான விரதத்தை மெச்சினேன். நினைக்கிற மாதிரி
பலிச் சக்கரவர்த்தியை சண்டை போட்டெல்லாம் வெல்ல முடியாது, அதனால் அவனை வெல்ல நானே உனக்கு மகனாகப் பிறப்பேன், அதன் பிறகு நடப்பதைப் பார, என்று சொல்லி மேலும் இதை யாரிடமும
நானே உனக்கு மகனாகப் பிறப்பேன். ஏனெனில் அவர்களை யுத்தத்தில் ஜெயிப்பது கடினம். அசுரர்களை தந்திரத்தால் தான் ஜெயிக்கணும். கவலைப் படாதே” என்று அதிதியிடம் பகவான் கூறுகிறார்.
”மகனாக பிறக்கிறாரா தாத்தா?”
”ஆமாம் கண்ணா, சொன்னபடியே பகவான் அதிதிக்கு மகனாகப் பிறக்கிறார். மகனுக்கு வாமணன் ன்னு பேர் வைக்கிறார்கள்.
சரியான வயதில் ப்ரம்மோபதேசம் செய்து வைக்கிறாரகள்.”
”அப்படின்னா என்ன தாத்தா?”
”பிராம்மணணாப் பிறந்தா ஒவ்வொறு வயதில் ஒவ்வொரு கர்மங்கள் செய்யணும், அதுல ஒண்ணு தான் ப்ரம்மச்சர்யம் ங்கறது.
அதத்தான் அவங்க செய்யறாங்க.”
”அபபறம் என்னநடக்குது தாத்தா?”
”இதுக்கு நடுவில பலிச் சக்கரவர்த்தி யாகம் செய்கிறார். எல்லா வேதவிற்பன்னர்களையும் வரச்சொல்லி மரியாதை செய்கிறான்.”
”வாமனர் போறாறா தாத்தா?”
”ஆமாம், அவர் போகாம இருப்பாறா?”
”தன் பெற்றோரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பலிச் சக்கரவர்த்தி யாகம் செய்யும் இடத்திற்கு வருகிறார்.”
”பலிச் சக்கரவர்த்தி வாமனனைப் பார்க்கிறார்.”
”எப்படி இருக்கார் தாத்தா?”
”பிரம்மசரியம் பொருந்திய வாமனனைப் பார்த்து மகிழ்ந்து போகிறார் பலிச் சக்கரவர்த்தி.”
"அங்க என்ன நடக்குது தாத்தா?"
"அவருக்கு அமர்வதற்க்கு ஆசனம் கொடுத்து பருகுவதற்க்கு நீர் போன்றவற்றைக் கொடுத்து, தங்களுக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் என்று உபசாரம் செய்கிறான் பலி.”
”அசுரகுல வேந்தனே, உன்னுடைய விருந்தோம்பலை நினைத்து எனக்கு மகிழ்ச்சி தான், எனக்கு பெரிசா ஒண்ணும் வேண்டாம், என் காலால் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும், அவ்வளவு தான்,” என்கிறான் விஷ்ணுவாக வந்துள்ள வாமணன்.
"என்ன தாத்தா , இவர் இப்படி மூணு அடி நிலம் போதும் என்றுகேட்கிறார், அதுல என்ன பண்ணமுடியும்?" கொஞ்சம் பொறுத்துப் பார் கண்ணா.’
பலிச்சக்கரவர்த்தி, "பெரியவரே, நீங்கள் ரொம்பவும் குறைவாகக் கேட்கிறீர்கள், நீங்கள் கவலைப் படவேண்டாம், நீங்கள் எது கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், கேளுங்கள்", என்றான்.
வாமனரோ, "பலி, உன்னுடைய தாராள குணத்திற்கு மிகவும் நன்றி, எனக்கு நான் கேட்ட மூன்று அடி நிலத்தைத் தவிர வேறே எதுவும் வேண்டாம்", என்கிறார்.
"அப்புறம் என்ன ஆறது , தாத்தா? "
”இவ்வளவு சொன்ன பிறகும் வாமனன் பிடிவாதமா மூன்று அடி நிலம் தான் வேணும்ந்னு சொன்னதுக்கு பிறகு பலி,
"சரி வாமனரே, நீங்கள் கேட்டது போலவே மூன்று அடி நிலத்தை உங்களுக்கு தானமாத்தர தயார், இருங்கள், அர்க்யம் கொடுக்க நீர் எடுத்துண்டு வறேன்," என்று சொல்லிவிட்டு திரும்பறான் பலிச்சக்கரவர்த்தி.
இதுக்கு நடுவில
" பலிச்சக்ரவர்த்தியின் குரு சுக்ராச்சாரியார், வந்து இருப்பது விஷ்ணு என்று தெரிந்து, " பலி, ஏமாந்து போகாதே, வாமன உருவத்தில் இருப்பது விஷ்ணு. இந்திரனுக்கு சாதகமா வந்து இருக்கார், அவர் உன்னை ஏமாத்தி விடுவார். அதனாலே அவர் கேட்டதை கொடுக்காதே", என்று அறிவுறை சொல்றார்.
"அவர் விஷ்ணுவாகவே இருந்தாலும் பரவாயில்லை, யாசகம் கேட்டு வந்தவனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லறது எங்க குலத்தில் கிடையாது, அவர் என்ன கேட்கிறாறோ அதைக் கொடுக்க வேண்டியது என் கடமை" என்று பலி பதில் கூறுகிறான்.
சுக்க்ராச்சாரியாருக்கு பயங்கற கோபம். ஏதாவது பண்ணணும் என நினைக்கிறார்.
”என்ன ஸஸ்பென்ஸ் வைக்கிறே தாத்தா?"
"ஆமாம் கண்ணா, பலி நீர் உள்ள பாத்ரத்தை எடுக்கத் திரும்பற துக்குள்ள வாமனன் மிக உயரமா வளர்ந்து நிக்கறார்.
தானம் கொடுக்கணும்ந்னா கமண்டலம் மாதிரி ஒரு பாத்திரம் தேவை. அதுல மூக்குமாதிரி ஒரு துவாரம் இருக்கும்.
சுக்க்ராச்சாரியாருக்கு பலி தானம் கொடுப்பது பிடிக்கலை, அதனால ஒரு சின்ன வண்டு மாதிரி உருவம் எடுத்துண்டு அந்தத் துவாரத்தை அடைச்சுக்கிறார்."
"ஏன் தாத்தா, துவாரத்தை மூடிட்டா என்ன ஆகும்? "
"தானம் கொடுக்க முக்கியம் அந்தக் கமண்டலம் வழியா தண்ணீரை நம்ம கையில் ஏந்தி யார் வாங்கிக்கிறார்களோ அவர்கள் கையில் விட்டுட்டோம்ன்னா தானம் கொடுத்துட்டோம்ன்னு அர்த்தம் ".
"அப்ப நீர் வந்துதா தாத்தா? "
"சுக்க்ராச்சாரியர் கமண்டலம் துவாரத்தை அடைத்து கொண்டிருப்பதை கவனித்த விஷ்ணு ஒரு சிறு தர்ப்பையால் குத்தினார். சுக்க்ராச்சாரியாரின் ஒரு கண் குருடாகியது. "
"கமண்டலம் வழியாக நீர் வெளிவந்து, தானம் கொடுத்ததாக அர்த்தம்.
இதற்கிடையில் குள்ளமா இருந்த வாமனர் நெடுனெடுன்னு வளர்ந்து பூமிக்கும் வானத்துக்கும் இடையே வளர்ந்து நிற்கிறார். விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் அவரிடம் அடங்கி நின்றன. ஒரு கையில் சக்கரமும்,
மற்றொரு கையில் சங்கும் கொண்டு வானளாவி நிற்கிறார்.
"ஒரு காலால் பூமியையும், மற்றொரு காலால் விண்ணையும் அளக்கிறார்."
பலி, "நான் கேட்ட மூன்றுஅடிகளில் இரண்டு அடிகளால் பூமியையும் விண்ணையும் அளந்து விட்டேன், மூன்றாவது அடியை எங்கே வைப்பது?"
பலி எதிர் பார்க்கவில்லை!
இதற்கு இடையில் வானளவு உயர்ந்து இருந்த வாமனர் தன் உருவத்தை மீண்டும் குறைத்துக் கொண்டார்.
பலி குனிந்து , "வாமனரே , நான் சொன்ன சொல்லை மீற மாட்டேன். எனவே மூன்றாவது அடியை எனது முடி மீது வைத்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள்.”
அதே போல பகவான் விஷ்ணுவும் அவனுடைய தலையில் தன்னுடைய மூன்றாவது அடியை வைத்தார்.
விஷ்ணு, " பலி, நீ சொன்ன சொல்லை காப்பாத்தினாய் , நீ வேண்டுவதைக் கேள், உனக்கு வரம் அளிக்கிறேன்", என்றார்.
"நீ பிற்காலத்தில் சுதல லோகத்தில் இந்திரனைப் போன்ற பதவியைப் பெற்று அரசனாக வாழ அருள் புரிகிறேன் ", என்று அருளிச் செய்தார்.
இந்தக் கதையைத் தான் ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில்,
"அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி"
என்று அந்தப் பரமன் அடியைப் பாடுகிறார்.
"அப்படின்னா என்ன அர்த்தம் தாத்தா?"
"யார் யாரெல்லாம் அந்தப் பெருமானின் அடிகளைப் பற்றுகிறார்களோ அவனை நான் ஒரு போதும் கை விடுவதில்லை என்பது தான் இந்தக் கதையின் முக்கியம்.
இது அமைந்துள்ள பாசுரம் இதுதான் கண்ணா.
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி,
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி,
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி,
வன்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி,
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய்