ஒற்றை மரமும் ரெட்டை பெயரும் =0= குமரேசன் கிருஷ்ணன் =0=
(இது ஏழாவது படிக்கும் என்மகள் ஹரிணி கிருத்திகாவின் ஓவியம் , அவளின் ஓவியத்தை கண்டவுடன் என்னுள் எழுந்த கவி இது )
========================================================================
ஒற்றை மரமும் ரெட்டை பெயரும்
--------------------------------------------------
ஒற்றை வீடுமந்த
ஒற்றை மரமும்
ஓயாதெழுப்பும்
அவள் நினைவுகளை
என்னுள் ...
பள்ளிப் பருவத்தில்
பாடம் பயில்வதாய்
சுற்றித்திரிவேன்
சும்மாவேனும்
அம்மரத்தை ...
இலைகள் பேசும்
இரகசியமறிய
இமைகள் மூடி
இலயித்திருப்பேன்
இரவுகளில் கூட ...
அவளோடு பேசியதில்லை
அவள் விழிகளின் மொழிகள்
வெகு பரிட்சயமெனக்கு...
அந்த ஒற்றை மரத்தில்
அவள் பெயர் செதுக்கி
அந்தரத்தில் மிதப்பேன் ...
எனைக்காணாத
ஏதோவொரு பொழுதில்
எதிர்ப்படுவாள்
என்வீட்டருகில்...
பள்ளிகள் கடந்து
பறவைகளின் சிறகுபெற்று
பறந்தோம் திசைகள் மாறி...
மரப்பட்டைகளும்
மறவாது அவள் நினைவும்
கொழுந்துவிட்டெரியும்
சிலபொழுது ..என்னுள்...
பிறிதொருநாள்
நினைவுகளால் கொன்ற
நினைவிடம் நாடி
நின்றேன் நடுக்கத்துடன்...
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாயிருந்த
அம்மரத்தைப்போல்
அவள் வீடும்
வெறிச்சோடியிருந்தது...
ஆனாலும்
அம்மரப்பட்டைகளில்
அவள் பெயருக்கருகில்
அழகாக செதுக்கப்பட்டிருந்தது
என் பெயர் ...
-------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்