குரங்குபெடல் பயணம் -ரகு

ஓடை குறுக்கிடும்
அம்மண்பாதையில்
குரங்குபெடல் பயணம்
மகிழ்வுறு பெயல்

செம்மண் சிதறச்சிதற
சுற்றுகிற சக்கரத்தில்
சிந்திவிழும் சைக்கிள்செயினின்
இசைநயனம்

அக்குள் கம்பிபற்றிய
இறுக்கத்தின் ஈரம்
காயாமல் இப்போதும்
நினைவுகளின் ஓரத்தில்

சில்வண்டுச் சிருங்காரமும்
பனங்கீற்றுகளின் உறைதல்களோடும்
ஒய்வுறுந் தருணத்தில்

என் சைக்கிளின் கைப்பிடியை
லாவகமாய்ப் பற்றிப் பார்க்கும்
சில செந்நிறத் தட்டான்கள்

அரும்பு மீசைக்கும்
பிறகொரு நாளில் குரங்குபெடல்
அழுத்தியதுண்டு
ஊருக்குத் தெரியாமல்

பருக்கள் தழும்புகளாய்
புலம்பெயர்ந்துவிட
இந்நேரம் தார்சாலைக்குள்
புதைந்திருக்கக்கூடும்
அம்மண்பாதையும்!

எழுதியவர் : அ.ரகு (26-Feb-15, 1:11 pm)
பார்வை : 158

மேலே