செப்பலோசை - தூங்கிசைச் செப்பலோசை
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை, விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.
இயற்சீர் வெண்டளையால் அமைந்த 'தூங்கிசைச் செப்பலோசை' யுடைய குறட்பாக்கள் இரண்டு உதாரணத்திற்காகக் காட்டியுள்ளேன்.
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்! 1121 காதற் சிறப்புரைத்தல்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28 நீத்தார் பெருமை
பதினாறே வயது நிரம்பிய திருச்சியில் + 1 படிக்கும் என் பிரியத்துக்குரிய இளங்கவி விவேக் பாரதி ’கவிதை’ என்ற தலைப்பில், தன் தம்பி எளிய சொற்கள் கொண்டு அவனுக்குப் புரியுமாறு எழுதச் சொன்னதற்காக அவனிடம் அறிவுரை சொல்வது போல் வடித்துள்ள குறள் வெண்பாக்கள் பத்தும் அருமை. பத்துமே மாச்சீரும், விளச்சீரும் பெற்ற ’தூங்கிசைச் செப்பலோசை’ அமைந்த 'ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்' ஆகும்.
உதாரணம்:
ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்
கற்பனைப் பெண்ணின் கருவே கவிதை
சொற்களின் கோர்வை கவி! 1
அறிவில் உதிக்கும் அழகே கவிதை
அறிந்தே எழுது கவி! 2
உண்மை உரைக்கும் உயர்வுக் கவிதையை
எண்ணம் இனிக்க எழுது! 3
இரு விகற்பக் குறள் வெண்பா
பாவில் இனியது வெண்பா அதிலும்
குறளிலே சொன்னால் இனிது. - வ.க.கன்னியப்பன்
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
பூட்டிய வீட்டில் புகையிலைக் குஞ்சிகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன - ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்! 1 * - பாடலாசிரியர் கபிலன்
கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! - இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்! 2 * - அகரம்.அமுதா
கனிகளை உண்ணும் குயில்களின் கூட்டில்
இனிதா(ய்) யிசைக்கும் குருவி - பனியுறை
பூவின் சிலிர்ப்பினில், குட்டி அணிலென
தாவிக் குதிக்கும் மனம் 3 * வ.க.கன்னியப்பன்
குறிப்பு:-
இம்முறை சற்றே கடினமானது என்பதால் இம்முறையைப் பலரும் கையாள்வதில்லை. புதிதாய் வெண்பா எழுதுபவர்கள் யாரும் இம்முறையைக் கையாள வேண்டாம். பொருட் சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று அகரம் அமுதன் தெரிவிக்கிறார்.