கண்முன் விரல் சொடுக்கி
இந்நீட்சியின் முடிவறியா
மூன்று விரல்கள்
வேண்டுமானால்
துண்டிக்கப்படும் என்பேன்.
இந்தவரியில் ஒழுகலாரம்பம்
உணர்வுக் குடுவையின்
சில சொட்டுக்கள்.
பற்றாக்குறையாகிய
ஒரு குடை நனைந்திருக்க
இருதலைகள் முட்டிப்பிரிய
தாராளமாய் காதல்.
விரல்களிட்ட
செல்லச் சண்டையில்
கொஞ்சமாய் கீறல் வலி
மிஞ்சியதெல்லாம் காதல்.
வாழ்த்துக்கள் நட்பேயென்ற
கடிதமொன்றை வாசிக்க
உதடெல்லாம் பொய்
விழிமுழுதும் காதல்.
நேற்றய கனவில்
நீயெனச் சொல்ல
சின்னதாய் கிண்டல்
வெட்கக்கண்ணாடியில் காதல்.
தெரியாமல் விரல்கள் பட
தெரிந்தே பிரிக்கவில்லை
மெதுவாகப் பொடிநடை
வேகமாகக் காதல்.
சரளமாய் பேசிக்கொண்டிருக்க
திடீரென விழிகள் மோதி
மெளனத்தின் வாசல் தொட
மெல்லிய சிரிப்பில்
சத்தம்போடும் காதல்.
முதல்முறையாய் சேலையில் வந்து
அபிப்ராயம் கேட்டு நிற்க
தானாய் முத்தமிட நான்
தடுக்காத உன் கைகள்
காதலை உறுதிப்படுத்திய
முத்திரை நொடிகள்.
ஆம் அதன் பிறகு நாம் காதலர்கள்.
உன்னைப்பற்றி எனக்கும்
என்னைப்பற்றி உனக்கும்
எல்லாமும் தெரிந்தபின்னும்
இன்றென்ன குழம்பிலிருந்து
அஃது எப்படியிருந்தது வரையே
பேசிமுடிக்க ஒரு மணிநேரம்
தாண்டியதெப்படி?
ஒரு கவிதையென நீ கேட்க
உன் பெயரெழுதி நான் தர
பழைய மொக்கை
என்று சொல்லிவிட்டு
அக்காகிதத்தை
பத்திரப்படுத்தியிருந்தாய்
ஏன்?
ஒரு முத்தமென நான் கேட்க
பொறுக்கி என திட்டிவிட்டு
கன்னம் திருப்பி
இதழ் பதித்தாய்
எதற்கு?
காற்றிலலலையும்
ஒற்றைமுடியை
செவியோரம் உன்கை
சிறையிடைய
வளையலிசையில்
லோலாக்கு நடனம்.
தலையசைத்து நீ பேச
கூந்தலுதிர்க்கும் ஒரு பூ
தவம் செய்யாத பூமிக்கு
நீ தந்த வரம்.
பூக்களுக்கு
பூட்டு
இதழ் திறக்கா
நின் மௌனம்.
நிலாவில்
மேடுபள்ளமிருக்கும்
நிரூபணம் நீ.
ஈர் அம்புகள்
வரம்பு மீறாமலிருக்க
எல்லைக் கோடா?
கண்மை.
காற்றும் மின்சாரம்
கடத்துமென்பேன்
மறுப்பவர் யாவரும்
உன் பார்வையை
சந்திக்கட்டும்.
மலர்களுக்கு
வண்ணம் தீட்டுவது
வீண்வேலையென்றே
நீ மருதாணி
வைப்பதில்லையோ?
மெதுவாக நீ
பேசத் தொடங்கயிலேயே
புருசுலி நிஞ்சாவாய் என்
கேட்கும் திறன் வேகம்
கூடிவிடுகிறதே.
இப்படி அணுஅணுவாய்
உனை இரசித்துருகி
எதிரெதிராய் நாம்
அமர்ந்திருந்த
ஒரு நாளோடு சேர்த்து
சில நிமிடங்கள்
ஆரம்ப நினைவுளில் மனம்
நிசப்தத்தில் மூழ்கியிருக்க
என்ன என்றவாறு
கண்முன் விரல் சொடுக்குகிறாய்
ஒன்றுமில்லை என்றவாறு
ஆறிய தேநீரை
பருகத் தொடங்குகிறேன்.
இதோ உன் பேரன்
அழுகிறான்
என்னவென்று பார்.
--கனா காண்பவன்