இறையே நீ எங்கிருக்கிறாய் =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

இறையே ...நீ
எங்கிருக்கிறாய்
தேடித் தேடி
தேடலில் தொலைந்தேன்
தேடுபொருளறியாது...

உதவும் உள்ளத்துள்
உறைந்திருக்கிறாயென்றால்
உள்ளங்கள் குறைவுதான்
ஊரில் ஏனோ ...

தூணிலும் துரும்பிலும்
துளிர்த்திருப்பாயென்றால்
துடித்திடும் கொலைகள்
நாளும் ஏனோ ...

இயற்கையின் சுவாசத்தில்
இருந்திருப்பாயென்றால்
இயற்கையால் அழிவுகள்
இன்னும் ஏனோ ...

மதங்களுக்குள்
மறைந்திருப்பாயென்றால்
மனிதம் கொல்லும்
மதமும் ஏனோ ...

நல்உள்ளத்துள்
வாழ்ந்திருப்பாயென்றால்
நாளும் நல்லோர்க்கு
துன்பம் ஏனோ ...

பொய்யிலும் புரட்டிலும்
நீயில்லையென்றால்
நாளும் பொய்கள்
ஜெயிப்பதேனோ ...

மெய்யிலும் உய்யிலும்
உண்டென்றால் ..நீ
உயிர்த்தலின்றி இன்னும்
இருப்பதேனோ ...

ஏனோவென்ற கேள்வி
என்னை தாக்க
என்னுள் தொலைந்தேன்
தேடுபொருளறியாது...

கற்பினை பறித்த
கயவனுக்கும்
காவலாய் ...பணமே
நிற்குமென்றால் ...

தப்புகள் செய்யும்
தறுதலைக்கும்
தரணியில் ...பணமே
முன்னின்றால் ...

இனியிங்கு பணமே
இறையா .....
இனிதான பாசங்கள்
வெறும் புரையா...

பாசாங்கு பலசெய்து
பணம் மட்டும்
பெற்றுவிட்டால்
இறையே நீயுமுடன்
இருப்பாயோ ...

காசே...
கலியுகத்து
கடவுளென்றால்

மாசாய்...
மதியே நீ
மாறவேண்டாம்

இறையே
இதயத்துள் ...நீ
வேண்டாம்

நின்று தான்
நீ ..
கொல்வாயெனில்

நித்தம் நடக்கும்
கொடுமைகளை

சித்தம் சிதைக்கும்
சிவப்புகளை

கண்டு நானும்
வாழ்வேனோ
உண்டு உடலை
வளர்ப்பேனோ ...

வறுமையில்
வாடும் மனதுகளை
வலியச் சென்று
உணராமல் ...

பெருமை கொண்டு திரிந்திடும்
பெரும் பணம் பெற்ற
பெரியோரே ...

மருந்தும் ...கல்வியும்
மனிதனுக்கு மறுத்தலின்றி
கிடைத்துவிட்டால் ...

பணமுமிங்கு பிணமாகும்
படிப்பேயினி உலகாளும்

நெருப்பு பூண்டு
நெஞ்சினிலே
விருப்பு வெறுப்பு
விலக்கிவிட்டால்...

கறுப்புத் திரைகள்
கலைந்தோடும்
கருப்பும் வெள்ளையாய்
மலர்ந்தாடும்

பூக்களின் நிறங்கள்
மாறும் முன்
பூமியில் இறையே ..நீ
புகுந்துவிடு

வெள்ளை மனதை
விட்டுவிட்டு
பிள்ளை மனதை
ஊட்டிவிட்டு

''அழுக்குப் பூண்ட ''
அம்மன(ண)த்தை
அன்றே அழித்திடு..உன்
ஆழியாலே...

இறையே ..நீயுண்டென்றால்
இன்றேயிதை நீ ..செய்துவிடு
இன்னலையின்றே கொன்றுவிடு ..

===============================================
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (3-Mar-15, 12:36 am)
பார்வை : 502

மேலே