கோடுகள்
சுவரில் கிறுக்கிய
கரிக்கோடுகளில்
அம்மாவிற்கு வரவேண்டிய
கடன் பாக்கி..
இட்டிலி விற்ற காசுக்கு!
குடித்துவிட்டு வந்து
அப்பா போட்ட
வரிக்கோடுகள்..
அம்மாவின் முகத்தில்..
உழைத்து கொடுத்த காசுக்கு!
பசியில் அழுது உறங்கியபின்
காய்ந்துபோன
கண்ணீர்க்கோடுகள்
குட்டிப்பாப்பா முகத்தில்..
இன்னும் எத்தனை நாளைக்கு..?
படிக்கிறேன்..படிக்கிறேன்..
வரவேண்டும் ஓர்நாள்
புன்னகை கோடுகள்
அம்மாவின் உதட்டில்
இருப்பாளா அது வரைக்கும்?
இருட்டு வாழ்க்கைக்குள்
கருப்பு திராட்சை இன்பம்
தொலைத்து தேடுகின்றோம்
கிடைக்கும் நிச்சயமாய்
என்றே காலம் கடத்துகின்றோம் !..
வாழ்க்கை உன் மேல் போட்ட
கிறுக்கல் கோடுகள் யாவினையும்
அழித்திட துடிக்கிறேன்..
அதுவரையில்..அம்மா
நீ கொஞ்சம் பொறுத்திடேன்!