எனக்கென்ன கவலை
தேனை எடுப்பதோடு
முடிகிறது என் வேலை..
மலரின் கர்வம் பற்றி
நான் கவலைப் படுவதில்லை..
என்றது தேனீ!
ஒளியைத் தருவதுடன்
முடிகிறது என் வேலை..
உலகம் ஏற்றுக் கொள்கிறதா
என்பது என் கவலை இல்லை..
என்றான் கதிரவன்!
வரியைக் கட்டுவதுடன்
முடிகிறது என் வேலை..
சரியாக செலவிடப் படுகிறதா
என்றறிய இல்லை எனக்கு கடமை
என்றான் குடிமகன்!
மோப்பம் பிடிப்பதுடன்
முடிகிறது என் வேலை..
திருடனை தண்டித்தார்களா
என்பது பற்றி எனக்கென்ன கவலை..
என்றது மோப்ப நாய்..!
குழந்தையாய் படைப்பதுடன்
முடிகிறது என் வேலை..
நெறியோடு மனிதன் வாழ்கிறானா
என்பது பற்றி எதற்காக எனக்கு கவலை..
என்றான் இறைவன்!
கவிதையை படைப்பதுடன்
முடிகிறது என் வேலை
அது சிறப்பானதா இல்லையா
என்பது பற்றி இல்லை எனக்கொரு கவலை..
என்கிறேன் நான்!