கோலம்

கதிரவன் பூக்கும் முன்-நீ
காலையில் பூத்து
ஈரக் கூந்தலோடு
தரையில் என்ன செய்கிறாய் ?
புள்ளிகள் வைத்து
புள்ளிமான் என்ன செய்கிறாய் ?

வெறுங் காலால் தான் மிதிக்கிறாய்
உன் வீட்டு முற்றமோ
முத்தமென்று பிதற்றுகிறதே !!!

பூமிப் பெண்ணுக்கு
பொட்டு வைக்கிறாயோ ?
அமுத விரல்களால் அழகை
இட்டு வைக்கிறாயோ ?
தங்க விரல்களால்
தரையூரும் எறும்புகளுக்கு
தானம் செய்கிறாயோ ?!!
புரிந்து கொண்டேன்
அழகுக் கோலம் நீ
அரிசி மாக்கோலம் போடுகிறாயோ !!?


இப்படி
அதிகாலையிலே அழகி
உன்னைப் பார்த்தால்
மார்கழி குளிராமல்
என்ன செய்யும் !!!

மார்கழியில் மட்டுந்தான்
அலாரத்திற்கு அடிபணிவேன்
எங்கள் வீட்டுச்
சேவலுக்கும் செவி கொடுப்பேன் !!!

மாக்கோலம் ரசிப்பதா
முற்றம் பூத்திருக்கும் உன்
பூக்கோலம் ரசிப்பதா
மூச்சடைத்துப் போவேன் !!!

நானும்
என் வீட்டு முற்றமும்
காத்திருக்கிறோம்
எப்போது நீ ...........???










எழுதியவர் : சலோப்ரியன் (26-Apr-11, 5:59 pm)
சேர்த்தது : Paul Antony
பார்வை : 455

மேலே